கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டுமகாதானபுரத்தில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி 18ஆம் தேதி ஆடித் திருவிழா கொண்டாடப்படும். மறுநாள் நடக்கும் மகா அபிஷேக விழா பிரசித்திபெற்றது. இதில், தமிழ்நாட்டின் பல்வேறுப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
இதில், முக்கிய நிகழ்வாக கோயில் பூசாரி தெலுங்கு செட்டியார், குரும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த 7 பேர் தலையின் மீது தேங்காய் உடைப்பார். இதைத் தொடர்ந்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், பக்தர்களின் தலையில் அவர்கள் ஏழு பேரும் தேங்காய் உடைப்பர்.
தலையில் தேங்காய் உடைக்கும்போது பலருக்கு ரத்தம் வரும். இதனால், பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்காமல், மாற்று வழிகளில் தேங்காய் உடைக்க வேண்டுமெனவும், தலையில் வைத்து எடுத்த பிறகு, சிதறு தேங்காய் போல கல்லில் உடைக்கலாம் அல்லது மாற்று வழிகளில் உடைக்கலாம் என சமுதாய நிர்வாகிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை கோயில் பூசாரி ஏற்கவில்லை. நீண்ட காலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக சில சமுதாயத்தினர் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், 'தீ மிதித் திருவிழா, அலகு குத்துதல் எனப் பல்வேறு வகையான நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றப்படுகிறது. அவர்களாக விரும்பித்தான் இதை மேற்கொள்கின்றனர். கலிங்கத்துப்பரணி போர் வெற்றியை கொண்டாட யானைகளை பலியிட்டதாகக் கூறியுள்ளது.
இவையெல்லாம் மத நம்பிக்கை சார்ந்தவை. எந்தவொரு மத நம்பிக்கை, வழிபாட்டு முறைகளில் தலையிட்டு நீதிமன்ற உத்தரவின் மூலம் தொந்தரவு செய்யமுடியாது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 (ஏ) பிரிவின்படி மத உணர்வுகளை புண்படுத்துவது தண்டிக்கக்கூடிய குற்றம். அதன் அடிப்படையில், மனுதாரர்கள் தரப்பில் கோரும் நிவாரணத்தை இந்த நீதிமன்றம் தரமுடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோயில் முன் பன்றி இறைச்சி வீசியவர்களுக்கு வலைவீச்சு!