மதுரை: மதுரையைச் சேர்ந்த மாணவர் ஓருவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த மனுவில், "நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் (சி.ஏ) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறேன். மேலும் எனது குடும்பத்தில் நானே முதல் பட்டதாரி. இந்நிலையில் கடந்த (மே.02) அன்று எனது கல்லூரி முதல்வர் என் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டம் 447, 294(b), 323 மற்றும் 506(i) ஆகிய பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் கல்லூரியில் என்னை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து 25.06.2022 அன்று நடைபெற்ற நான்கவது செமஸ்டர் தேர்வை எழுத அனுமதிக்குமாறு உத்தரவிடக் கோரி மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தேன். எனது மனுவை ஏற்கனவே விசாரித்து நீதிமன்றம் கல்லூரி முதல்வரிடம் எனது கைப்பட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்குமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் எனது கல்லூரி முதல்வரிடம் எதிர்வரும் காலங்களில் நான் தவறு ஏதும் செய்ய மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகு தேர்வு எழுதினேன். இந்நிலையில் மீண்டும் கடந்த 11.08.2022 அன்று எனது கல்லூரி முதல்வர் மூலமாக எனது தந்தைக்கு என் மீதான கிரிமினல் வழக்கு முடிவடையும் வரை என்னை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டாது என தகவல் அனுப்பப்பட்டது.
ஏற்கனவே நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி நான் எதிர்வரும் காலங்களில் எந்த தவறும் செய்ய மாட்டேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தும் அதனை கருத்தில் கொள்ளாமல் கல்லூரிக்குள் அனுமதிக்காதது சட்டத்திற்கு புறம்பானது எனவே என்னை படிப்பதற்கு கல்லூரிக்குள் அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி தரப்பில், கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய மாணவர் மீதான குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளதால் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி, பி.காம், (சி.ஏ) பட்டப்படிப்பை இரண்டாண்டு முடித்து, குடும்பத்தில் முதல் பட்டதாரியான மனுதாரரின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்லூரி முதல்வர் மாணவருக்கு எதிராக அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என உத்தரவிட்ட நீதிபதி மாணவர் தொடர்ந்து கல்வி பயில அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:இரண்டாவது நாளாக மழை வெள்ளம்.. சிக்கித் தவிக்கும் அந்தியூர்...