மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் 'குடியுரிமை திருத்த சட்டமா குடிகெடுக்கும் திட்டமா' என்னும் தலைப்பில் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், தமுமுக மதுரை மாவட்ட பொறுப்பாளர் கெளஸ் வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் விஜயராஜன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி ராமகிருஷ்ணன், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுவதில்லை என்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர், ஜெர்மனியில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்கள் இனம் பண்பாடு ஆகியவற்றில் தூய்மை பேணும் விதமாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதைப் போன்று இந்தியாவிலும் செய்ய வேண்டும் என்று தனது நூல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
அதனை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இச்சட்டம் இங்குள்ள இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி இந்துக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் எதிரானதே. தற்போது சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு உடனடியாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்றார்.
இதையும் படிங்க: சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் எதிர்ப்பு மாநாடு - நாளை மறுநாள் சென்னையில் நடக்கிறது