மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா கரிசல்பட்டி கிராம மக்களுக்கு கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு பொது மக்களுக்கு கபசுரக் குடிநீர் பொடி வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், தற்போது வரை ஐந்து முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் ஊரடங்கு ஆரம்பிக்கும் முன்பாகவே ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரிசி, கோதுமை, பருப்பு எண்ணெய் அடங்கிய பொருள்கள் நியாய விலைக் கடைகள் மூலம் இரண்டு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விலக்கு, நூறு நாள் வேலைத்திட்டத்தின் பணிபுரிபவர்களுக்கு விலக்கு என பல்வேறு தொழில்களுக்கு தளர்வுகள் அறிவித்து பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி செய்துவருகிறார்.
இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 27 விழுக்காடு பங்களிப்பை வழங்கி வரும் 5 மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. விவசாய பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு சந்தை கட்டணம் பெறக்கூடாது, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகள் என பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது" எனக் கூறினார்.