மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக மதுரை அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு ஹோட்டலில் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்ட அமலாக்கம் குறித்த மாநில அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. வழக்கறிஞர் அருட்தந்தை சகாய ஃபிலோமின்ராஜ் ஒருங்கிணைப்பில் இந்த கூட்டம் நடைபெற்றது.
சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர் அலாய்சியஸ் பேசுகையில், ”மலம் அள்ளுகின்ற தொழில் குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை நாம் மறுத்து இது எங்களுக்கான தொழில் அல்ல என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த தொழில் நம் மீது சுமத்தப்பட்டுள்ளது. தொழிலுக்காக மத்திய மாநில அரசுகள் இயற்றிய சட்டங்களை முதலில் அமல்படுத்துங்கள். இந்தச் சட்டங்களை அமல்படுத்தினாலும் அமல்படுத்தாவிட்டாலும் எங்களுக்கு இந்த இழிதொழில் தேவையில்லை” என்றார்.
ஐடியாஸ் அமைப்பின் இயக்குனர் அருட்தந்தை பால் மைக் பேசுகையில், ”மனிதக் கழிவை மனிதர்களே அள்ளும் இந்தத் தொழிலில் எந்தவிதமான சமூக அங்கீகாரமும் பொருளாதார வளமும் எங்களுக்கு இல்லை. இருந்தும் இந்தத் தொழில் செய்கின்ற தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்காமல் இந்த அரசுகள் அப்படியே வைத்திருக்கின்றன. சமூகம் காட்டுகின்ற பாரபட்சம் ஒரு பக்கம் இருந்தாலும் அரசாங்கமும் அவ்வாறே நடந்துகொள்வது மேலும் வேதனையாக உள்ளது. அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தைக்கூட இந்தத் தொழிலாளர்கள் இன்னும் எட்டவில்லை” என்று பேசினார்.
மேலும், வழக்கறிஞர் சகாய ஃபிலோமின்ராஜ் 'துப்புரவு தொழிலாளர்களுக்கு இந்த சமூகம் இழைக்கும் பெரும் அநீதிகள் - ஒரு பார்வை' என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது அவர், ”இந்தியா முழுவதும் துப்புரவு பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்திற்கும் மேல் இருக்கிறது. அவர்களில் 20 லட்சம் பேர் மிகவும் சுகாதார கேடான நிலையில் பணியாற்றி வருகின்றனர். இந்த இழி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் மக்களில் 98 விழுக்காட்டினர் தாழ்த்தப்பட்ட சாதியினர். கடந்த 2013ஆம் ஆண்டு மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.
இச்சட்டத்தின்படி பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி பாரம்பரிய கருவிகளைக் கொண்டு மலம் அள்ளும் தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்துவது பிணையில் வெளிவர முடியாத குற்றமாகும். இச்சட்டம் நடைமுறைக்கு வந்து ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
மலம் அள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கையை கணக்கெடுப்பதற்காக கடந்த 40 ஆண்டுகளில் மத்திய அரசு 7 முறை தேசிய அளவில் கணக்கெடுப்பை செய்துள்ளது. 1992ல் 5.88 லட்சம் பேரும், 2003இல் 6.76 லட்சம் பேரும், அதனைத் தொடர்ந்து 7.70 லட்சம் பேரும் உயர்ந்துள்ளனர். ஆனால் கடந்த 2013-ல் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் திடீரென 13 ஆயிரத்து 369ஆக குறைந்துள்ளது. இது கணக்கெடுப்பில் அரசு செய்துள்ள மோசடியை காட்டுகிறது.
கடந்த 2011இல் தமிழ்நாடு அரசின் புள்ளிவிவரப்படி கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் எண்ணிக்கை வெறும் 167 பேர் என்றும் 2014இல் 422 நபர்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மனிதக் கழிவை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஏற்படும் விஷவாயு மரணங்கள் ஏராளம் கடந்த ஆறு ஆண்டுகளில் இப்படிப்பட்ட மரணங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருவதோடு இந்தியாவிலேயே அதிக விஷவாயு மரணங்கள் நிகழும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தற்போதுவரை ஐந்து நாட்களுக்கு ஒரு உயிர் என்ற கணக்கில் பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் இறப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்
இவரையடுத்து தேனி மாவட்ட தலித் பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் மஞ்சுதா பேசுகையில், பாதுகாப்பு உபகரணம் என்ற பெயரில் இரண்டு கைகளுக்கும் கையுறை மட்டுமே இந்த அரசு வழங்கியுள்ளது. ஊராட்சி பகுதிகளில் பணியாற்றும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலை மிக வேதனைக்குரியதாக உள்ளது என்று தெரிவித்தார்.