திருப்பரங்குன்றம் மலைப்பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட குரங்குகள் மற்றும் மயில்கள் வாழ்ந்து வருகின்றன. திருப்பரங்குன்றம் பகுதிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோரை சார்ந்தே இந்த உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை இன்றி திருப்பரங்குன்றம் பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் மலை மேல் வாழும் குரங்குகள், மயில்கள் மற்றும் இதர உயிரினங்கள் உணவின்றி தவித்து வந்தன.
இதனையறிந்த திருப்பரங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் மதன கலா, தினமும் மலை அடிவாரத்தில் விலங்குகளுக்கு உணவு மற்றும் நீர்த் தொட்டியில் மாநகராட்சி சார்பாக தண்ணீர் நிரப்பவும் ஏற்பாடு செய்துள்ளார்.
மேலும் தினந்தோறும் நடைபெறும் காய்கறி சந்தையில் இருந்து மிச்சமாகும் காய்கறிகளை விலங்குகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். திருப்பரங்குன்றம் அருகே உள்ள தன்னார்வலர்கள் விலங்குகளுக்கு உணவு அளிக்க விரும்பினால் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து வருகிறார்.
மனிதாபிமானமிக்க திருப்பரங்குன்றம் ஆய்வாளரின் இந்தச் செயலை விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோவிட்-19: சிங்கப்பூரில் 250 இந்தியர்கள் பாதிப்பு