மதுரை: அஸ்ரா கார்க் ஐபிஎஸ் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக கடந்த 2006ஆம் ஆண்டு தனது பணியைத் தொடங்கினார். பின்னர், கடந்த 2022ஆம் ஆண்டு தென் மண்டல காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தென் மாவட்டங்களில் நிலவி வந்த ரவுடிகளின் சாம்ராஜ்யத்திற்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்த ஆடியோ-வீடியோ தகவல்கள் மூலம் பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை தென் மண்டல காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதில், குறிப்பாக ரவுடி வரிச்சியூர் செல்வம் குறித்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் தென் மண்டலக் காவல் துறைத் தலைவராக இருந்த அஸ்ரா கர்க்கைப் பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் புழங்கிய போதைப்பொருட்களின் நடமாட்டத்தைத் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தார். இவரது நடவடிக்கை காரணமாக போதைப் பொருட்கள் தொடர்பான சுமார் 831 வழக்குகளில் 1,450 பேரின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்தார். போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்களின் சொத்துக்கள் மட்டுமல்லாது, அவர்களின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்களின் சொத்துக் கணக்கும் முடக்கப்படும் என்ற எச்சரிக்கை நல்ல பலனை பெற்றுத் தந்தது.
தென் மாவட்டங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக் குற்றங்கள் பதிவாகும் காவல் நிலையங்களில் 59 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வகையில் தென் மண்டல காவல் துறை துரித நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. காவல் துறையால் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றவாளிகள் ஜாமீன் பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்கின்ற காரணத்தால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க காவல் துறை கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறது.
மேலும், குழந்தைகள் பாலியல் தொடர்பான 202 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்காத வகையில் 59 நாட்களில் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்து தண்டனை வாங்கி கொடுத்தார். குழந்தைகள் தொடர்பான இந்த வழக்குகளில் அதிக கவனத்தோடும், எச்சரிக்கையோடும் கையாளத் தேவையான பயிற்சிகளும், ஆலோசனை மற்றும் ஒழுங்குமுறைகளும் தென் மண்டல காவல் துறை மூலமாக வழங்கப்பட்டன.
மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை 91 போக்சோ வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனை பெற்றுள்ளனர். இவர்களில் 39 பேர் விருதுநகர், 25 பேர் திண்டுக்கல், 8 பேர் தூத்துக்குடி, 5 பேர் தென்காசி, 4 பேர் மதுரை, தேனி மற்றும் சிவகங்கை தலா 3 பேர், 2 பேர் ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் தலா ஒருவர் என வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில், கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட 20 வழக்குகளில் விருதுநகரில் 18, திண்டுக்கல் மற்றும் தேனியில் தலா ஒரு வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது அஸ்ரா கார்க் வடசென்னையின் கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் ரவுடிகளுக்கு எதிரான அவரது ஆட்டம் ஒரு போதும் ஓய்ந்துவிடப் போவதில்லை என்பதன் அடையாளமே சிறந்த பொதுச் சேவைக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கத்தைப் பெறும் வகையில் அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு காவல்துறையின் அதிரடி நாயகனாக மட்டுமன்றி, ஆட்ட நாயகனாகவும் அஸ்ரா கார்க் தொடர்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கத்தை’ தென் மண்டல காவல் துறைத் தலைவராக அஸ்ரா கார்க் பெற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க:குந்தவை வழங்கிய சிலைகள் கடத்தல் - போலீசார் மெத்தனம் என பொன்.மாணிக்கவேல் புகார்