மதுரை : மதுரை மாவட்டத்தின் பாரம்பரிய அடையாளங்களுள் ஒன்றாகத் திகழ்வது ஜல்லிக்கட்டு. ஒவ்வொராண்டும் பொங்கலை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் காளைகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் மிகப் பெரிய சவாலாகும்.
சுற்றிலும் அமைக்கப்பட்ட மேடையில் பார்வையாளர்களின் விசில் சத்தமும், கைதட்டலும் விண்ணதிர, வாடிவாசலிலிருந்து பாயும் காளைகளும் திமிலைப் பிடித்து வலிமை காட்டும் காளையர்களும் ஒன்று சேர சீருடையுடன் அணிவகுத்து நிற்பது கண்கொள்ளாக் காட்சியாகும். 'பிடித்துப் பார்' என்று சவால் விடும் காளை உரிமையாளர்களும், 'பிடித்துக் காட்டுகிறேன்' என்று தொடை தட்டி முறுக்கி நிற்கும் வீரர்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டின் சுவாரஸ்யங்கள்.
ஜல்லிக்கட்டு
இந்த ஆண்டு கரோனா 3ஆவது அலையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கும் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது. ஆனாலும், மதுரை மாவட்டம் முழுவதும் காளைகளும், மாடு பிடி வீரர்களும் ஆங்காங்கே தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது தேனூர் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்பதுடன், மாடுபிடி வீரர்களாகவும் உள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக இளைஞர்கள் பயிற்சி எடுத்துக் கொள்வதுடன், காளை மாட்டின் உரிமையாளர்களும் தங்களது மாடுகளுக்குத் தேவையான உணவுகள் வழங்கி, பயிற்சிகளும் அளித்து வருகின்றனர்.
மாடுகள் தயார்படுத்தல்
தேனூர் கிராமத்தைச் சேர்ந்த ரிஷிகரன் கூறுகையில், 'என்னுடைய காளையின் பெயர் கருப்பு. தற்போது நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுக்காக தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
வாரந்தோறும் நீச்சல் பயிற்சி அளிப்பதுடன், நாள்தோறும் நடைபயிற்சியும் அளித்து வருகிறேன். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு ஒரு சில நாளிலிருந்து பருத்தி விதை, குச்சிப்புண்ணாக்கு, உளுந்தம் தூசி ஆகியவற்றை உணவாகக் கொடுத்து வருகிறேன்' என்கிறார்.
மாடுபிடி வீரர் பேட்டி
தேனூர் வைகையாற்றில் சனி ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரிலுள்ள காளைகள் அனைத்தும் அழைத்து வரப்பட்டு நீச்சல் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அதிகாலை 5.30 மணியளவில் நடைபயிற்சிக்கும் அழைத்துச் செல்கின்றனர். பிறகு காலை 9 மணியளவில் ஒதுக்குப்புறமான பகுதியில் காளையோடு இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
அதே ஊரைச் சேர்ந்த மாடுபிடி வீரரும் காளைமாட்டின் உரிமையாளருமான ஆனந்தன் கூறுகையில், 'நாங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். சத்தான தீவனம் தொடர்ந்து வழங்கப்படுவதோடு, மாடுகளுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழங்கி வருகிறோம். காளைகளை துன்புறுத்துவது கிடையாது.
பயிற்சி
எங்கள் வீட்டிலுள்ள ஒரு உறுப்பினரைப் போன்றே அவற்றை வளர்க்கிறோம். வாடியில் கலந்து கொள்ள அழைத்துச் செல்லும்போது, மாட்டின் உயரத்தைக் கணக்கிட்டு நிராகரிக்கிறார்கள். மனிதர்களில் நெட்டை, குட்டை எப்படியோ அதுபோன்றே காளைகளிலும் உண்டு. ஆனால் திறமையில், வலிமையில் எந்தக் காளைக்கும் அவை சளைத்தவை அல்ல. பாகுபாடு பார்க்காமல் அனைத்து நாட்டு காளைகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்' என்கிறார்.
காளைகளோடு இணைந்து மாடு பிடிக்கும் இந்தக் காளையரும் பரபரப்பாய் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். எவ்வாறு காளையின் திமிலை அணுக வேண்டும் என்பதை இளைஞர்களில் மூத்தவர்கள் இளையவர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றனர்.
டோக்கன் குளறுபடி
அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு இளைஞர் சேதுமாதவன் கூறுகையில், தற்போது காளைமாடுகளை வடமாடாகக் கட்டி வைத்துதான் இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றோம். உணவைப் பொறுத்தவரை நாங்கள் சாப்பிடுவதைவிட மிக சத்தான ஊட்டங்களையே வழங்குகிறோம். சில காளைகளுக்கு முட்டைகளையும்கூட உணவாகத் தருகிறோம்' என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், 'மதுரையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகியவைதான் மிக முக்கியமான வாடிகள். இந்த வாடிவாசல்களில் காளையை அவிழ்த்துவிடுவதே மிக கௌரவமானது. ஆனால் இங்கு டோக்கன் வழங்கும் முறைகளில் தற்போதும் குளறுபடி உள்ளது.
பரிசுகளை வெல்லும் முனைப்பில் வீரர்கள்
காளை உரிமையாளர்கள் காளைகளை அவிழ்த்துச் செல்வது தொடங்கி திரும்ப அழைத்துக் கொண்டு வீடு திரும்புவது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். டோக்கன் முறைகளை ஒழுங்குபடுத்தினால் பல்வேறு பிரச்சினைகளை சரி செய்ய முடியும்” என்கிறார்.
கரோனா, ஒமைக்ரான் நோய்த் தொற்று அச்சுறுத்தல் இருந்தபோதிலும் மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு திருவிழாவிற்காக காளைகளும், மாடுபிடி வீரர்களும் மிக ஆர்வத்துடன் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றனர். ஒருவருக்கொருவர் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : ஜல்லிக்கட்டு; 'ஏலேய்... கிட்டி போடாத, மாட பிடி.. பரிச வாங்கு!