மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இதனை அடுத்துள்ள கீழ பட்டியைச் சேர்ந்தவர் மோகன், சகுந்தலா(26) தம்பதியினர். இவர்களுக்கு சேதுபதி, காமாட்சி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டையும் சச்சரவுமாக இருந்து வந்துள்ளது.
இதனால், சகுந்தலா தனது கணவனைப்பிரிந்து, கடந்த 5 ஆண்டுகளாகத் தனது தாயாரின் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில், அங்கு ஒருவரோடு திருமணத்தைத் தாண்டிய பழக்கம் ஏற்பட்டு, நெருங்கிப் பழகி வந்துள்ளதாகத்தெரிகிறது.
இதனை சகுந்தலாவின் அண்ணன் சௌந்தரபாண்டியன் பலமுறை தட்டிக்கேட்டும், அதனை ஒரு பொருட்டாகக்கூட சகுந்தலா மதிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சௌந்தரபாண்டியன் அரிவாளால், தனது தங்கையை சரமாரியாக வெட்டிக் கொன்றார். கடும் ரத்த காயங்களுடன் சகுந்தலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மதுரை மாவட்டம், மேலவளவு காவல் துறையினர் சகுந்தலாவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சௌந்தரபாண்டியன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள சௌந்தரபாண்டியனை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மருத்துவர் தற்கொலை: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது