மதுரை: மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் மீது, பணி செய்ய விடாமல் தடுத்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலக இயக்குநருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவரிடம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்த முயன்றனர்.
அதன் தொடர்ச்சியாக, மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி மண்டல அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக வருகை தந்தனர். இந்த நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் உயர் அதிகாரி இல்லாததால், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்ய அனுமதிக்க முடியாது என அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்தனர்.
எனவே, உயர் அதிகாரிகள் வருவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக அங்கு காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி மதுரை உதவி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வந்ததால், அவர் பயன்படுத்திய அறைகளில் சோதனை நடத்த தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அனுமதி கோரினர்.
இருப்பினும் அதற்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் உள்ள வழக்கறிஞர்களும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வருகை தந்து, பின்னரே சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் குற்றம்சாட்டி லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அலுவலக இயக்குநருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக லஞ்ச ஒழிப்பத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் ஹவாலா பணம்.. ஆந்திர மாநிலத்தவர் கைது!