மதுரை: நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பற்றி எழுப்பிய கேள்விக்கு இந்திய ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களாவன, 'தனியார் தொலைத்தொடர்புத்துறை நிறுவனங்கள் வைத்திருக்கிற பாக்கி, அதற்கு தரப்பட்டுள்ள தவணைக் காலம், பங்குகளாக மாற்றிக்கொள்ள அரசு கொடுத்த வாய்ப்பு ஆகியன பற்றி அவையில் நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.
அதற்குப் பதில் அளித்துள்ள தகவல் தொடர்பு இணை அமைச்சர் தேவுசிங்க் சவுகான், இன்னும் மொத்த ஸ்பெக்ட்ரம் பாக்கி வோடபோன் (2,02,257 கோடி), பாரதி ஏர்டெல் (1,01,828. 75 கோடி), ரிலையன்ஸ் ஜியோ (73,958 கோடி) ஆக மொத்தம் சுமார் 3.78ஆயிரம் கோடியாகவுள்ளது எனவும்; இதற்கான தவணைக் காலம் 15 ஆண்டுகள் (அதாவது 2039ஆம் ஆண்டு வரை) தரப்பட்டுள்ளது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தவிர ஏ.ஜி.ஆர் பாக்கி (Annual Gross Revenue) 7 நிறுவனங்களுக்கு மொத்தம் 89ஆயிரத்து 146 கோடி ரூபாய் உள்ளது.
இந்த பாக்கிகள் மீதான வட்டி பாக்கியை நிறுவன பங்குகளாக தரலாம் என்ற வாய்ப்பை அரசு கொடுத்து இருந்தது.
நீதிமன்றம் நிர்ணயித்த காலத்திற்கும் மேலாக ஸ்பெக்ட்ரம் பாக்கிக்கு 4 ஆண்டு தவணை நிறுத்தமும் சிறுகூடுதல் வட்டியோடு தரப்பட்டது. பங்குகளாக மாற்றுகிற வாய்ப்பை வோடபோன், டாடா டெலிசர்வீசஸ், டாடா டெலி மகாராஷ்டிரா சர்வீசஸ் ஆகியன பயன்படுத்திக் கொண்டுள்ளன.
மறுபக்கம் குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ஆரவாரமாக அறிவிக்கப்பட்ட 2 விழுக்காடு வட்டிச் சலுகைத் திட்டத்திற்கு (Interest Subvention scheme) அரசு வங்கிகளுக்குத் தர வேண்டிய மானியத்தை ஆரவாரமே இல்லாமல் அனுப்பாமல் நிறுத்திக் கொண்டது, ஒன்றிய அரசு.
ஆனால் பெரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இவ்வளவு பெரிய தொகைக்கு - அதாவது 3.78ஆயிரம் கோடி ரூபாய்க்கு 15 ஆண்டுகள் தவணை நீட்டிப்பு என்றால் எவ்வளவு பாசம்!
வட்டி பாக்கியை பங்குகளாக மாற்றியதிலேயே சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் 35 விழுக்காடு பங்குகள் அரசின் கைகளுக்கு வந்துவிட்டன. அசலுக்கு என்ன செய்வது? 35 விழுக்காடு பங்குகளை வாங்கி, அரசு முதன்மை பங்குதாரராக மாறியும் நிர்வாகம் அரசின் கட்டுப்பாட்டிற்கு வரவில்லை.
பிரலாவின் கைகளிலேயே தொடர்ந்து இருப்பதற்கு விதிகளை (AoA) திருத்துவதற்கு அரசு அனுமதித்துள்ளது. 16ஆயிரம் கோடி ரூபாய் நடவடிக்கை எப்படி அரங்கேறியுள்ளது பாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'நீ உட்காருப்பா முதல்ல...' கர்நாடக பாஜக எம்.பி.க்களுக்கு எதிராக மக்களவையில் சீறிய சு.வெங்கடேசன்!