மதுரை மாவட்டம் தெப்பக்குளம் தேவிநகர் மேட்டுத்தெருவைச் சேர்ந்த காசிராஜன் என்பரது மகள் தாரணி. 2019ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இவர் சட்டப்படிப்பிற்காக அரசு கல்லூரியில் விண்ணப்பித்தார். ஆனால் கிடைக்கவில்லை.
ஐந்து மாதங்களுக்கு முன்பு சென்னை மயிலாப்பூரில் உள்ள பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்காக தாரணி விண்ணப்பித்தார். கல்விக் கடனை ஏற்பாடு செய்து தருவதாக கூறி தனியார் நிதி நிறுவனத்தின் தொடர்பு எண்ணை மாணவியிடம் அந்த கல்வி நிர்வாகம் வழங்கியதாக தெரிகிறது.
கல்விக் கடன் கிடைக்க பணம் செலுத்த வேண்டும் என மாணவியிடம் நிதி நிறுவனத்தினர் கூறினர். தான் படிக்க வேண்டும் என்ற ஆசையில் வீட்டிலிருந்த நகைகளை விற்று 1 லட்சத்திற்கும் மேலான பணத்தை மாணவி ஆன்லைன் மூலம் செலுத்தினார்.
நேற்று (ஏப்.9) தாரணியிடம் செல்போனில் தொடர்பு கொண்ட நிதி நிறுவனத்தினர், மேலும் 23 ஆயிரம் பணம் கொடுத்தால் கல்விக் கடன் கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தனர். அந்த தொகையையும் ஆன்லைனில் செலுத்திவிட்டு அவர்களை மாணவி தொடர்பு கொண்டார். அப்போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாரணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது மாணவி யாரிடம் பணம் கொடுத்தார்? கடைசியாக யாரிடம் பேசினார்? போன்ற தகவல்களை செல்போனில் இருந்து சேகரித்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலத்தில் திருப்பூர் இளைஞர் தற்கொலை!