தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, போராட்டகாரர்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூடு, ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டி கோரிக்கை உள்ளிட்டவை தொடர்பான பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் வழக்குகள் அனைத்தையும் விசாரித்துவந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நீதிபதி சிவஞானம் உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நிர்வாக நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் தலைமையிலான அமர்வே தொடர்ந்து ஸ்டெர்லைட் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிவஞானம், ஸ்டெர்லைட் தொடர்பானவரும், ஸ்டெர்லைட் சம்பந்தமான அனைத்து வழக்குதாரர்களும் காணொலி காட்சி மூலம் 15ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்றைய தினமே, முறையீடு குறித்த முடிவுகள் எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் வழக்கு மீண்டும் விசாரணை: ஹென்றி தகவல்