மதுரை: செங்கோட்டை ரயில்கள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி முதல், மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்படப் போவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், "விருதுநகர் - செங்கோட்டை ரயில்வே பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் முழுமையாக நிறைவு பெற்று விட்டன.
எனவே, நவம்பர் 1 ஆம் தேதி முதல் செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை, சிலம்பு மற்றும் மயிலாடுதுறை விரைவு ரயில்கள் மின்சார எஞ்சின் மூலம் இயக்கப்பட உள்ளன. இதற்காக இந்த பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மின் வழித்தடத்தில் 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட இருக்கிறது.
ஆகவே இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த 25ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் மின் வழித்தடத்தை நெருங்கவோ, தொடவோ முயற்சிக்க வேண்டாம். மழை மற்றும் மின்னல் வெட்டும் நேரங்களில் குடையுடன் மின் வழித்தடத்தின் கீழே கடப்பதும் ஆபத்தை விளைவிக்கும். மேம்பாலங்களில் இருந்து மின்வழித்தடத்தின் மேல் ஏதாவது ஒரு பொருளை எறிந்தாலும் கடும் மின்சார தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்.
ரயில்வே நிர்வாகத்தின் அனுமதியில்லாமல் மின் வழித்தடத்தின் அருகில் உள்ள மரங்களை வெட்டுவது, மரக்கிளைகளை செம்மைப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். லெவல் கிராஸிங்குகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்திருந்த போதிலும், ரயில்வே லெவல் கிராஸிங்குகளை கடக்கும் போது நீண்ட இரும்பு கம்பிகளை செங்குத்தாக வைத்துக் கொண்டு நடப்பதும், வாகனங்கள் மேல் பகுதியில் அமர்ந்து பயணிப்பதும், வாகனங்களில் சரக்குகளை உயரமாக, அளவுக்கு அதிகமாக வைத்து செல்வதும் ஆபத்தை விளைவிக்க கூடிய செயல்கள் ஆகும்.
அக்டோபர் 31 ஆம் தேதி அன்று சென்னையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நவம்பர் 1 அன்று சென்னையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் செங்கோட்டை விரைவு ரயில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன.
அதேப்போல நவம்பர் 1 ஆம் தேதி அன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் பொதிகை எக்ஸ்பிரஸ், நவம்பர் 2 ஆம் தேதி அன்று செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் மற்றும் மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஆகியவற்றில் மின்சார என்ஜின்கள் இணைக்கப்பட இருக்கின்றன என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தனியார் தோல் தொழிற்சாலை போனஸ் விவகாரம்! ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ஆதரவு!