மதுரை: ரயில் பயணிகளின் வசதிக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் மடாட் எனும் தளம் வாயிலாக இதுவரை 80 ஆயிரத்து 902 குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 14 ஆயிரத்து 826 குறைகள் தீர்க்கப்பட்டு, பயணிகளுக்கு சேவை புரிந்துள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் மடாட் பயணிகளுக்கு அவர்களின் புகார்களை விரைவாகத் தீர்க்க பயணத்தின்போது இணையம், ஆப், எஸ்எம்எஸ், சமூக ஊடகங்கள் மற்றும் ஹெல்ப்லைன் எண் (139) போன்ற பல தேர்வுகளை வழங்குகிறது. மேலும் ரயில் மடாட் (RailMadad) போர்ட்டல், பயணிகளின் குறைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரயில் மடாடில் குறைகளை இடுவதற்கான பல்வேறு முறைகள்: மொபைல் பயன்பாடு, இணையம், எஸ்.எம்.எஸ், மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் புகார்களை பதிவு செய்ய பயணிகளுக்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. இருப்பினும், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் ரயில் மடாட் ஹெல்ப்லைன் எண் 139, பயணிகளின் குறைகளை பதிவு செய்வதற்கு விருப்பமான தேர்வாக உள்ளது.
தெற்கு ரயில்வேயில் 51 சதவீதத்துக்கும் அதிகமான புகார்கள் ரயில் மடாட் ஹெல்ப்லைன் எண் 139 மூலமாகவும், 25 சதவீதம் ரயில் மடாட் இணையதளத்தின் மூலமாகவும், 4.5 சதவீதம் சமூக ஊடகங்கள் மூலமாகவும், 19 சதவீதம் ரயில் மடாட் ஆப் மூலமாகவும், மீதமுள்ளவை 139-க்கு SMS, மின்னஞ்சல், CPGRAMS போன்ற குறைதீர்ப்பு போர்டல் வாயிலகவும் பெறப்படுகின்றன.
ரயில் மடாடின் செயல்திறன்: தெற்கு ரயில்வேயில் நடப்பு நிதியாண்டில் 2023-2024 நவம்பர் 9 வரை, மொத்தம் 80 ஆயிரத்து 915 புகார்கள் ரயில்மடாடில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 80 ஆயிரத்து 902 குறைகள் பூர்த்தி செய்யப்பட்டு, சராசரியாக 99.98 சதவீதம் குறைதீர்ப்பு விகிதத்தை எட்டியுள்ளது.
2023 அக்டோபர் மாதத்தில் மட்டும், மொத்தம் 14 ஆயிரத்து 826 புகார்கள் ரயில்மடாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், தெற்கு ரயில்வே சராசரியாக 36 நிமிடங்களுக்குள் மேற்கண்ட குறைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், மருத்துவ அவசரநிலை மற்றும் பாதுகாப்பு உதவியின்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
மற்ற ரயில்வே போர்டல்களுடன் ரயில் மடாடின் ஒருங்கிணைப்பு: ரயில் மடாட் போர்ட்டல், மற்ற ரயில்வே தளங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது புகார்களை விரைவாக தீர்க்க உதவும் தரவுகளை நிகழ்நேரத்தில் சேகரிக்கிறது. ரயில்மடாட் ஒருங்கிணைந்த பயிற்சி மேலாண்மை அமைப்புடன் (ICMS) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இது இரயில்வேயின் மெக்கானிக்கல் துறை, தேசிய ரயில் விசாரணை அமைப்பு (NTES) மூலம் ரயில் அட்டவணைகள் பற்றிய நிகழ்நேர தகவல்களைச் சேகரிப்பது மற்றும் TTE-க்களின் விவரங்களைச் சரிபார்க்கும் TTE லாபி ஆகியவற்றால் கண்காணிக்கப்படுகிறது.
இந்த ஒருங்கிணைப்பின் காரணமாக, புகார்கள் உடனடி உதவிக்காக சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டாளர்களுக்கு உடனடியாக அனுப்பப்படுவதை உறுதி செய்கிறது. இந்த நெறிப்படுத்தப்பட்ட செயல்முறை, தேவையான ஆதரவை வழங்குவதற்கும், குறைந்த நேரத்தில் பயணிகளின் குறைகளைத் தீர்ப்பதற்கும் ரயில்வேயின் திறனுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளது.
வந்தே பாரத் குறைகளைத் தீர்ப்பதில் சிறப்பு கவனம்: வந்தே பாரத் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதில் குறிப்பாக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ரயில்கள் தொடர்பான குறைகள், தினமும் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்த, பயணிகளின் கருத்துகள் கவனமாக மதிப்பீடு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் மடாட் குழுவின் விரைவான நடவடிக்கை: கடந்த அக்டோபர் 31ஆம் தேதி சென்னை எழும்பூர்-கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்த பயணி குறித்து, உதவி எண் 139 மூலம் சக பயணி முருகன் என்பவர் அளித்த தகவலையடுத்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக செயல்பட்டு, விழுந்த இடத்திலிருந்து அப்பயணி மீட்கப்பட்டு மருத்துவ உதவிக்கு அனுப்பப்பட்டார்.
அதேபோன்று திருவனந்தபுரம் - மும்பை நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கழிவறையில் தண்ணீர் இல்லை என்று ரயில் பயணி சரண்யா என்பவரால் ரயில் மடாட் மூலம் புகார் அளிக்கப்பட்டது. வெறும் 17 நிமிடத்தில் அக்குறிப்பிட்ட கழிவறையின் தொழில்நுட்ப பிரச்னை சரி செய்யப்பட்டது. ராஜாராமன் என்பவர் தவறவிட்ட மதிப்புமிக்க பொருட்கள் அடங்கிய லக்கேஜ், புகார் பெறப்பட்ட 45 நிமிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு, புகார்தாரரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்திய ரயில்வே நிர்வாகத்தால் ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அவர்களின் குறைகளைக் களைவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்மடாட் தளங்களைப் பயன்படுத்தி, ரயில்வே சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும் தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய போக்குவரத்து மாற்றங்கள்..! வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர வேண்டுகோள்..!