மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு கிராமத்தில் சேது என்பவர் தனது வயலில் கோழி வளர்த்து வருகிறார். இதற்காக போடப்பட்ட வேலியில் இன்று (நவ.03) காலை மூன்று அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சிக்கிக்கொண்டது. இதைக் கண்ட சேது, உடனடியாக பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற திருநகரைச் சேர்ந்த சகாதேவன் என்பவருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரை வனத்துறையினர், சகாதேவனுடன் இணைந்து வேலியில் சிக்கிக் கிடந்த கண்ணாடி விரியன் பாம்பை சுமார் அரை மணி நேரம்வரை போராடி பத்திரமாக மீட்டனர். வேலியில் சிக்கியதால் பாம்பிற்கு லேசான காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து அப்பாம்பிற்கு உரிய சிகிச்சை அளித்த வனத்திறையினர், பாம்பை மீட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டுசென்று விட்டனர். கொடிய விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு எனத் தெரிந்தும் வேலியில் சிக்கிய அந்தப் பாம்பை தைரியமாக மீட்ட சகாதேவனை பொதுமக்கள் பாராட்டினர்.