மதுரை: ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் ஒவ்வொரு அங்கன்வாடிகளிலும் கர்ப்பிணிகளுக்கு மாதந்தோறும் 2 கிலோ சத்துமாவு மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு சத்துணவு மாவு உருண்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் இருந்து சத்துணவு மாவு பைகள் கடத்தப்படுவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.
மதுரை மாநகராட்சி 74ஆவது வார்டுக்கு உட்பட்ட பழங்காநத்தம் வடக்குதெரு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திலிருந்து அடையாளம் தெரியாத சிலர் நள்ளிரவில் அங்கன்வாடியை திறந்து, அங்கிருந்து தலா 25 கிலோ பாக்கெட்டுகள் அடங்கிய 16 மூட்டைகளை கடத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் சத்துணவு மாவு பாக்கெட்டுகள் கடத்தப்படுவதை, அந்த பகுதி மக்கள் புகைப்படமாக எடுத்து காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
இந்த சத்துணவு மாவு கடத்தல் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள மாடு வளர்க்கும் நபர் ஒருவருக்கு அங்கன்வாடி பணியாளர்களின் உறவினர்கள் உதவியோடு மாடுகளுக்கு வழங்குவதற்காக கடத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், அந்த குறிப்பிட்ட அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவு மாவு வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் அங்கன்வாடி அலுவலகத்தை முற்றுகையிட்டு கடத்தல் குறித்து பணியாளர்களிடம் கேட்டபோது உரிய விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சமூகவலைதளங்களில் அந்த வீடியோ வெளியானதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். நள்ளிரவில் அங்கன்வாடிக்கான சாவி எப்படி கிடைத்தது? இந்த கடத்தலுக்கு பின்புலம் யார்? என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை பெண் மருத்துவரிடம் கைவரிசை.. ஜம்தாரா கும்பல் சிக்கியது எப்படி?