மதுரையில் திருமலை நாயக்கரின் 437ஆவது பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது தமிழகத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை மதிக்கும் வண்ணமாக மணி மண்டபங்கள், சிலைகள் அமைக்கப்பட்டன. அதனை தற்போதைய அரசும் தொடர்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் திருமலை நாயக்கரின் பிறந்த நாளை அரசு விழாவாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதேபோன்று பூலித்தேவர் பிறந்தநாளையும் அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக ரூ. 50 கோடி ஒதுக்கி அரண்மனையைப் புதுப்பிக்கவும், மணி மண்டபம் அமைக்கவும் உத்தரவிட்டார்.
ஓமந்தூரார் பிறந்த நாள் அரசு விழாவாக நடைபெறுவதும் அதன் தொடர்ச்சிதான். அதேபோன்று டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கும் திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைத்து வருகின்ற 22ஆம் தேதி தமிழக முதலமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்" என்றார்.
மேலும் அவர், “தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற வருமான வரிச்சோதனை வழக்கமான ஒன்றுதான். உரிய ஆவணங்களைக் காண்பித்தால் அந்த வழக்கை வருமான வரித்துறையே முடித்து வைத்துவிடும்” என்றார்.
இதையும் படிங்க: வெள்ளம் பாதித்த 121 குடும்பங்களுக்கு வீடுகள் - ராமோஜி குழுமம் உதவிக்கரம்