மதுரை மாவட்டம் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தென் தமிழ்நாட்டில் மிக முக்கிய நகரமாக மதுரை மாநகரம் இருக்கிறது. தூங்கா நகரமாக இருந்து வரும் மதுரையில் இரவு பகலாக பலர் கூலி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு 12,330 நபர்கள் சாலை விபத்தில் இறந்துள்ளனர். சாலை விபத்தில் இறப்பவர்கள் படிப்படியாக அதிகரித்து 2018ஆம் ஆண்டு 22,656 நபர்கள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக மதுரையை பொருத்தவரை 2017ஆம் ஆண்டு 72 நபர்களும், 2018ஆம் ஆண்டு 66 நபர்களும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை வசதிகள் அமைக்கப்படாததே அதிகப்படியான விபத்துக்கு காரணமாக அமைகிறது. சாலைகள் அமைக்கப்படும் சமயத்தில் பாதசாரிகளுக்கு சரியான பாதை வசதி, சைக்கிளில் செல்பவர்களுக்கு சரியான பாதை வசதி அமைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 84 விழுக்காடு சாலைகளில் பாதசாரிகளுக்கு சரியான நடைபாதை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் 15 வயது முதல் 29 வயதுவரை உள்ளவர்களை அதிகப்படியாக சாலை விபத்துகளில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெறும் சாலைகள் அனைத்தும் பாதசாரிகளுக்கு நடைபாதை வசதி செய்து தர உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.