மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் அருகே முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்றார். அப்போது கீழவாசல் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த வேன் ஒன்று அதிவேகமாக சாலையை கடக்க முயன்றபோது முதியவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்தகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. மதுரை மாநகரில் தொடர்ந்து வாகனங்கள் விதிகளை மீறி வேகமாக செல்வதால், பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்றும், இதற்கு போக்குவரத்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.