கரோனா பெருந்தொற்று உருவாக்கித் தந்திருக்கும் இந்த இடைவெளி காலத்தை பயனுள்ளதாக்கும் வகையில், மதுரை மாவட்டம், ஆனையூரில் ஆங்கில பேச்சுப் பயிற்சி, தையல், அழகுக்கலை உள்ளிட்ட வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய தொழிற்பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறார் சிருஷ்டி பயிற்சி மையத்தை நடத்தி வரும் பாலமுருகன்.
இந்தப் பயிற்சி மையத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பயின்று, பயன்பெற்று வருகின்றனர். இங்கு குளோபல் அகாடமி எனும் பயிற்சி மையம் சார்பில் மாணவ, மாணவிகள் எளிமையாகவும் இலவசமாகவும் ஆங்கிலம் கற்றுக்கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனையூரைச் சுற்றியுள்ள மாணவிகள் மட்டுமில்லாது, திருமணமான பெண்களும் மத்திய அரசின் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் இந்த சிருஷ்டி பயிற்சி மையத்தில் தையல் கலையினைப் பயின்று வருகின்றனர்.
மேலும், சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் தையற்கலை, அழகுக்கலை, எம்பிராய்டிங் உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளை பயிற்சியாளர் தமிழ்ச்செல்வி எவ்விதக் கட்டணமுமில்லாமல் இலவசமாக வழங்கி வருகிறார்.
இது தொடர்பாக சிருஷ்டி பாலமுருகன், தமிழ்ச்செல்வி இருவரிடமும் கேட்டபோது, ”கரோனா காலத்தில் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக இந்தப் பணியினை செய்து வருகிறோம். இதன்மூலம் அவர்கள் சுயதொழில் முனைவோராக உருவாவதற்கு வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறோம் ”எனத் தெரிவித்தனர்.