மதுரை: கரிமேடு காவல் நிலைய பகுதியில் காவல்துறையினர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருசக்கர வாகனத்தில் பையுடன் சென்ற இளைஞர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் ஒருவர் மதுரையை சேர்ந்த விக்னேஷ்வரன் எனவும், நகைக்கடை உரிமையாளர் எனவும் தெரிவித்தார். அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கரிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அதில் நகை தொழில் வியாபாரம் செய்து வருவதாகவும், அதற்காக பணம் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பையில் 2 கோடியே 94 லட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து இன்று(செப்.12) மதுரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் விக்னேஸ்வரனிடம் வருமான வரித்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.