மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது ஜெயந்தி விழா நாளை (அக்.30) நடைபெற உள்ளது. இந்தநிலையில், இன்று(அக்.29) மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சசிகலா மரியாதை செய்தார்.
முன்னதாக, தஞ்சையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று மாலை மதுரை வந்த அவர், அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு அவருக்கு அதிமுக கொடியுடன் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை 8 மணி அளவில் ஓட்டலில் இருந்து புறப்பட்டு, ஜெயலலிதா பயன்படுத்திய தேர்தல் பரப்புரை வாகனத்தில் கோரிப்பாளையம் வந்தார். காலை முதலே மழை பெய்த நிலையில், சசிகலா வருகை அறிந்து அதிமுக, அமமுக கொடியுடன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர்.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பரப்புரை வாகனத்திலேயே தெப்பக்குளம் பகுதிக்கு சென்று மருதுசகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதிமுகவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சசிகலா கடந்த அக்.26 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு தனது ஒரு வார காலம் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகிய நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் சசிகலாவிற்கு ஆதாரவாக பேசி வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரஜினிகாந்த்துக்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு: வெளியான தகவல்