மதுரை எஸ்.ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த விவேகானந்த குமார், அவருடைய ஊழியர் சரவணக்குமார் ஆகிய இருவரும் கடந்த 15ஆம் தேதி நள்ளிரவு பணி முடித்து, மதுரை சிம்மக்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மதுரை மாநகர காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் செயல்படும் டெல்டா என்னும் சிறப்பு அதிரடிப்படை காவல்துறையினர் லத்தியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த விவேகானந்த குமார் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக உடலை வாங்க மறுத்து விவேகானந்த குமாரின் உறவினர்கள் ஆறு நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். தாக்குதல் நடத்திய காவலர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும், அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலையும், நிவாரணத் தொகையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், 18ஆம் தேதி விவேகானந்தர் குமாரின் மனைவி கஜப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், இவ்விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட திலகர் திடல் முதன்மை காவலர் ரமேஷ் பாபு என்பவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் நேற்று மாலை உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை விவேகானந்த குமாரின் உடற்கூறு ஆய்வறிக்கை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, இறந்தவரின் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர்.