சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, காவல் துறையினரின் சித்திரவதைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இயக்கம் நடத்தியவரும், குறிப்பாக வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது காவல் துறையினரின் அராஜகப்போக்கால் பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவருமான சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் சி.ஜே. ராஜன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அதில், "சாத்தான்குளம் விவகாரம் இன்று இந்தியா முழுவதும் பேசக்கூடிய ஒரு விஷயமாக மாறியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கையும் சிறப்பாக அமைந்துள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை தன்னிச்சையாக எடுத்துக்கொண்டது வரவேற்கத்தக்கது. காவல் துறையின் முதல் தகவல் அறிக்கை உண்மை அல்ல என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றுகின்ற அனைத்து காவலர்களும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். இந்த ஒரு சம்பவம்தான் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகையால், இந்த வழக்கை மிக ஆழமாக விசாரிக்க வேண்டியது அவசியம். நீதித்துறை நடுவர், காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றபோது கடைநிலை காவலர் கூட ”உன்னால என்னடா செய்ய முடியும்?” என்று ஒருமையில் மிரட்டியுள்ளார்.
சாட்சியளித்த பெண் காவலர் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளார். விசாரணை நடைபெறும்போது, விசாரணை நடைபெற்ற இடத்தில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி ஆகியோர் இருந்தது சாட்சிகளை அச்சுறுத்தும் நோக்கில் தான். மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரின் திட்டமிடலில்தான் இது நடைபெற்றுள்ளது. காவல் துறை தலைமை இயக்குநருக்குத் தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது, காவல் துறையின் சாம்ராஜ்யம் தான் இங்கே நடைபெறுகிறது என்பது தான் உண்மை.
’ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என்ற பெயரில் அடியாட்களை வைத்துக் கொள்வது நமது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சிபிசிஐடி, சிபிஐ விசாரணை என்பதை எல்லாம் நாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை. நம்மைப் பொருத்தவரை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற சித்திரவதைகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வரை கொண்டு சென்ற பின்னரும் கூட அதில் ஈடுபட்ட எந்த காவலரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. காவல் துறையில் சீர்திருத்தம் என்பது அவசியம். பிரிட்டிஷ் ஆட்சியின்போது உள்ள நடைமுறைகள் இன்றைக்கும் உள்ளன. இதனை முழுவதுமாக மாற்ற வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றம் மட்டுமே துணை நிற்க முடியாது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து மனித உரிமையைக் காப்பதில் துணை நிற்க வேண்டும். அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுத் தர முன்வர வேண்டும்.
சாத்தான்குளம் சம்பவத்தில் தமிழ்நாடு டிஜிபிக்கும் முதலமைச்சருக்கும் பொறுப்பு உண்டு. ஆகையால் பகிரங்க மன்னிப்புக் கோருவதுடன், காவல் துறையை சரியாக வழிநடத்த முடியவில்லை என்றால் அந்த பொறுப்பை பெற தகுதியுள்ள யாருக்கேனும் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும்" எனப் பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் சம்பவத்தில் தடயங்களை அழிக்க வாய்ப்பு; இன்றே விசாரணையைத் தொடங்க சிபிசிஐடிக்கு உத்தரவு!