மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதற்காக மங்கோலிய நாட்டின் தூதர் கான்சிங் கேன்போல்டு தனது மனைவி மாஷாவுடன் வருகைபுரிந்தார். அப்போது, அவரை வரவேற்ற அருங்காட்சியக இயக்குநர் நந்தா, காந்தி நினைவு சார்ந்த பல்வேறு புகைப்படங்களையும் அவர் பயன்படுத்திய பொருள்கள் குறித்து கான்சிங் கேன்போல்டிடம் விளக்கினார். காந்தி நினைவு அருங்காட்சியகம் செயலாளர் நடராஜன் காந்தி வரலாற்றைக் கூறும் ஆங்கில நூல் ஒன்றை அவருக்குப் பரிசாக வழங்கினார்.
பின்னர் மங்கோலிய தூதர் கான்சிங் கேன்போல்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதுரைக்கு வருகைதந்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பாக காந்தி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களும், காந்தி பயன்படுத்திய பொருள்களும் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. மிகப்பெரும் தத்துவ ஞானிகளாக மங்கோலியர்கள் இரண்டு இந்தியர்களைக் கருதுகின்றனர். அவர்கள் புத்தரும் மகாத்மா காந்தியும்.
இந்திய, மங்கோலிய நாடுகள் பல நூற்றாண்டுகளாக ஆன்மிக சமூகப் பொருளாதார உறவுகளை மேம்படுத்திவருகின்றன. இந்த உறவின் தொடர்ச்சியாகத்தான் 2015ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியா நாட்டிற்கு வருகைபுரிந்தார். இதன்மூலம் இந்தியாவிலிருந்து பல்வேறு முதலீடுகள் எங்கள் நாட்டிற்குக் கிடைத்துள்ளன. இந்திய கலாசாரம், தமிழ் கலாசாரத்தோடு வேறுபட்டதல்ல.
மிகப் பிரகாசமான உலகத்துக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய நாகரிகத்தைக் கொண்ட பண்பாடு நிறைந்த பூமி இந்தியா. மங்கோலிய நாட்டில் பிறக்கின்ற குழந்தைகளுக்கு இந்திய கலாசாரத்தின் பரிணாமத்தைச் சொல்லியே வளர்க்கிறார்கள். காளிதாசர் தாகூர் போன்ற தத்துவ ஞானிகளைக் கொண்ட இந்திய பூமியின் கலாசாரத்தை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது’ - திருச்சி சிவா ஆதங்கம்