ரயிலில் பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ. 7.79 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதில், "ரயில்களில் அதிரடி பயணச்சீட்டு பரிசோதனையின்போது, பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்வோர், பதிவு செய்யப்படாத உடமைகளை கொண்டு செல்வோர், வேறு ஒருவர் பெயரில் உள்ள பயணச்சீட்டில் பயணம் செய்வோர் ஆகியோர் பிடிபடுவது வழக்கம்.
மதுரை கோட்டத்தில் அனைத்து ரயில்களிலும் பயணச்சீட்டு பரிசோதகர்கள் ரகசியமாக திடீரென பயணச்சீட்டு பரிசோதனைகளை நடத்துவார்கள். அவ்வாறு கடந்த 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் நடப்பாண்டின் பிப்ரவரி 27ஆம் தேதிவரை மதுரை கோட்டத்தில் 1.37 லட்சம் பயணிகள் பிடிபட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.7.79 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் தெற்கு ரயில்வேயில் பயணச்சீட்டு இல்லாதவர்களிடம் அபராதமாக ரூ.83.99 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 22.9 விழுக்காடு அதிகமாகும். சென்னை கோட்டத்தில் 6.33 லட்சம் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் அபராதமாக ரூ.29.86 கோடி, திருவனந்தபுரம் கோட்டத்தில் 3.10 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.16.53 கோடி, பாலக்காடு கோட்டத்தில் 2.70 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.14.15 கோடி, சேலம் கோட்டத்தில் 1.69 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.9.61 கோடி, திருச்சி கோட்டத்தில் 1.12 லட்சம் பேரிடம் அபராதமாக ரூ.6.02 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த பிப்ரவரி மாதம் மட்டும் பயணச்சீட்டு இல்லாத பயணிகளிடம் தெற்கு ரயில்வே அளவில் அபராதமாக ரூ.9.15 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 32.8 விழுக்காடு அதிகமாகும். மேலும் நடப்பாண்டின் பிப்ரவரி 27ஆம் தேதி அன்று மட்டும் ஒரே நாளில் அதிகப்படியாக பயணச்சீட்டு இல்லாத 8,425 பேர் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.43.35 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் ரயிலில் உரிய பயணச் சீட்டு, புகைப்பட அடையாள அட்டையுடன் பயணம் செய்வதோடு அனுமதிக்கப்பட்ட அளவில் உடைமைகளை எடுத்துச் செல்லுமாறு தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுக்கிறது” என மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆனந்த் மஹிந்திராவுக்கு எதிரான புகார் மனு ரத்து!