மதுரையில் தொழில் சங்க பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதூர் சிட்கோ அலுவலக வளாகத்தில் ஊரக தொழில்துறை அமைச்சர் அன்பரசன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அதிமுக ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வம் கீழ் இயங்கிய குடிசை மாற்று வாரியம் சார்பில் தேனி, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர், கோவை மாவட்டங்களில் மட்டும் 2011ஆம் ஆண்டு 35 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
வைகை ஆற்றங்கரையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை இடமாற்றம் செய்யும் நோக்கத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டன. ஆனால், இதுவரை மக்களை அங்கு குடியேறாமல் கிடப்பில் போட்டுவிட்டார்கள். எனவே, வீடில்லாத, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை தேர்வு செய்து அந்த வீடுகளில் அவர்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இந்த வீடுகளில் குடியிருக்க விரும்பும் மக்களுக்கு, பயனாளரின் பங்கு தொகையையும் வங்கிக்கடன் மூலம் செலுத்த அரசே ஏற்பாடு செய்யும்.
தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தாத நிலையில் உள்ள வீடுகளை புதுப்பித்து மீண்டும் வீட்டின் உரிமையாளர்களுக்கே கொடுக்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
கடந்த ஆட்சியில் இது போன்ற பணிகளில் கவனம் செலுத்தாமல், ஒரு சில ஒப்பந்ததாரர்கள் பயன்பெறுவதற்காகவே குடிசை மாற்று வாரியத்தில் 25 ஆயிரம் கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தாமதம் செய்யும் வங்கிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் வங்கி மேலாளர்களை அழைத்து பேசி விரைவுபடுத்த உத்தரவிட்டுள்ளோம்” என்றார்.