மதுரையில் உள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் தற்போது 48 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, உணவு பொருள்கள் வழங்கக்கூடிய மூன்று ரோபோக்களை தமிழ்நாடு வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சாஸ்த்ரா சிறப்பு மருத்துவமனை சார்பாக வழங்கினார்.
ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோபோ 32 கிலோ எடை கொண்டது. 15 கிலோ எடையுள்ள மருந்து, உணவுப் பொருள்களை இது எடுத்துச் செல்லும். ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவிற்கு ரிமோட்டினால் இயங்கும் திறன் கொண்டது. இந்த ரோபோக்களை வழங்கும் நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் சங்குமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க... கரோனா தெருக்களைக் கண்காணிக்க ரோபா! - காவல் துறை அறிமுகம்
இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, 'கரோனா நோய் தொற்றிலிருந்து காப்பாற்றவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், மருத்துவர்கள், செவிலியர்களைக் காப்பாற்ற இந்த ரோபோ பயன்படும். நோயாளிகளின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இந்த ரோபோ பயன்படும். தேவையை பொறுத்து மற்ற மாவட்ட மருத்துவமனைகளுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.
தடை செய்யப்பட்ட பகுதிகளில் தளர்வு குறித்து நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் மருத்துவர்கள், அலுவலர்களுடன் கலந்தாலோசித்து மாற்றியமைக்கப்படும். இதில் பல மாவட்டங்கள் விடுபட்டுள்ளன. எனவே, முழுமையாக விடுபட்ட மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது' என்றார்.