மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் மோகன் என்பவர் மதுரை மாநகராட்சி வரி ரசீது ஆங்கிலத்தில் அச்சிட்டு வழங்கப்படுவதை எதிர்த்து தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநருக்கு புகார் அனுப்பியிருந்தார்.
ஆட்சி மொழிச் சட்டம் 1956-ன் கீழ் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகிய தமிழையே அனைத்து அலுவல் நடைமுறைகளிலும் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆனால், இதனை மீறும் வண்ணம் மதுரை மாநகராட்சி உட்பட பல்வேறு மாநகராட்சிகளில் வழங்கப்படும் ரசீதுகள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருப்பதாக அந்தப் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அளித்த அறிவுரையின் பேரில் நகராட்சித் துறையின் நிர்வாக இயக்குநர் பொன்னையன், தமிழ்நாடு முழுவதும் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சி மென்பொருள் தகவல்கள் உட்பட அனைத்தையும் தமிழில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதன் மூலம் தமிழக ஆட்சி மொழிச் சட்டம் 1956-ன் கீழ் தமிழிலேயே அனைத்து நடைமுறைகளையும் மேற்கொள்ளும் சட்டம் ஆர்டிஐ ஆர்வலர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரயில்களின் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை: தெற்கு ரயில்வே அறிவிப்பு