கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கென்றே, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பல்நோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகம், கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த மருத்துவமனையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவருக்கு, உறவினர்கள் எவரும் இல்லாத காரணத்தால், சிகிச்சை மறுக்கப்பட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முத்துக்குமார் கூறுகையில், 'கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையின் பின்புறம் மூதாட்டி ஒருவர் அழுது கொண்டிருப்பதாக எங்களுக்கு கிடைத்த தகவலையடுத்து அவரை சந்தித்து விவரம் கேட்டோம். அப்போது, அவர் தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அவருடன் இருக்க வேண்டிய நபர்கள் யாரும் தனக்கு இல்லையென்பதால், அவரை மருத்துவமனை பணியாளர் ஒருவர், கழிவு நீர் தொட்டி அருகே அமர வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
காலையிலிருந்து இரவு வரை அந்த இடத்திலேயே அமர்ந்து அழுது கொண்டிருந்த அவரை யாரும் கவனிக்கவில்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை. ஆகையால் இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளேன். மேலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். ஆதரவற்ற மூதாட்டிக்கு தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்' என்றார்.
இதையும் படிங்க:நண்பனின் நினைவு தினத்தில், தூய்மைப் பணியாளர்களைக் கவுரவப்படுத்திய நண்பர்கள்!