தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த நான்கு மாதங்களாக வலது தொடை, முழங்கால் பகுதிகளில் வலி , வீக்கம் ஏற்பட்டு நடக்கமுடியாமல் அவதிப்பட்டுவந்தார்.
இதையடுத்து தேவேந்திரனுக்கு மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. தொடர்ந்து அவர் அரியவகை எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், பல்வேறு சோதனைகள் முயற்சி மூலம் நோயாளியின் கால்கள் அகற்றப்படாமலேயே அறுவை சிகிச்சை மூலம் மாற்று மூட்டு பொருத்தி புதிய மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது குறித்து பேசிய மருத்துவமனை முதல்வர் வனிதா, இதுபோன்ற அறுவை சிகிச்சை தென் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கமாக எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காலை அகற்றுவதுதான் தீர்வாக இருந்த நிலையில், இதனை மிகச்சரியாக பரிசோதனை செய்து அரசு இராசாசி மருத்துவமனை மருத்துவர்கள் செயற்கை மாற்று மூட்டினை பொருத்தி சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
இந்த அரிதான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட பேராசிரியர் வி.ஆர். கணேசன் தலைமையிலான குழுவினரை மருத்துவமனை முதல்வர் வனிதா, மருத்துவக் கண்காணிப்பாளர் சங்குமணி ஆகியோர் பாராட்டினர்.