மதுரை: தாயாருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்கக் கோரி நிலுவையில் இருக்கும் விண்ணப்பம் குறித்து புதிதாக மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருக்கும் ரவிசந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக மதுரை மத்திய சிறையில் எனது மகன் ரவிசந்திரன் உள்ளார்.
இந்த வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், ரவிச்சந்தின் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018 செப்டம்பர் 6இல் தீர்ப்பு வழங்கியது. அதனடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசின் அமைச்சரவை 2018 செப்டம்பர் 9ல் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானம் தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்காக தொடர்ந்து காத்திருப்பில் உள்ளது. கரோனா தொற்று சிறைவாசிகளுக்கும் பரவிய நிலையில், எனது மகன் ரவிச்சந்திரனுக்கு மூன்று மாத கால விடுப்பு வழங்கக் கோரி மனு அனுப்பினேன். அதற்கு மத்திய அரசின் செயல் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்பிரிவின் கீழ் எனது மகன் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு சாதாரண விடுப்பு வழங்குவது குறித்து பரிசீலனை செய்ய இயலாது என தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டு அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது. ஆனால், இதனை காரணம் காட்டி ஏற்கனவே தமிழ்நாடு அரசு விடுப்பு வழங்க மறுத்த உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்துள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு 27 ஆண்டுகளாக நன்னடத்தையுடன் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கும் இரண்டு மாதகால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாரதிதாசன், நிஷாபானு அமர்வு, விதிகளுக்கு உட்பட்டே சாதாரண விடுப்பு கோர இயலும். சாதாரண விடுப்பு வேண்டுமெனில் விதி 20இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுக்காக கோர வேண்டும். கரோனா பரவலைக் காரணம் காட்டி விடுப்பு கோர இயலாது. ஆகவே, விதிகளின் கீழான காரணங்களில் ஒன்றை குறிப்பிட்டு புதிதாக மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.
ரவிச்சந்திரனின் தாயாருக்கு கண்ணில் அறுவை சிகிச்சைகான விடுப்பு கோரிய விண்ணப்பத்தை தனி மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 1 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கே.டி. ராகவன் விவகாரம் - என்ன நடக்கிறது பாஜகவில்?