தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மேலும் காலியாக இருந்த சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதியவர்கள், இளைஞர்கள், நிறைமாத கர்ப்பிணி உட்பட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பசுமலையில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் மதுரை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மதுரை மக்களவை வேட்பாளர் ராஜ் சத்யன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ராஜன் செல்லப்பா கூறுகையில்,"இந்த இடைத்தேர்தல் எங்களுக்கு வெற்றியை தேடித் தரும் வகையில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக அமோக வெற்றி பெறும். இத்தேர்தலில் அமைச்சர்கள், தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர்" என்றார்.