மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission - TNPSC) வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் பலதரப்பு மாணவ மாணவியரை பெரிதும் ஏமாற்றத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்துடன் பகிர்ந்து கொண்டவற்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
தமிழ்நாடு போட்டித் தேர்வு கல்வி மையங்களுக்கான சங்கத்தின் தலைவரும் ரேடியன் ஐஏஎஸ் அகாடமியின் (Radian IAS Academy) நிறுவனருமான ராஜபூபதி இன்று (டிச.17) ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு நேர்காணலில், 'டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வரும் 2023-க்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து தேர்வர்களும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் இந்த அட்டவணையை எதிர்பார்ப்பது வழக்கம்.
பலருக்கும் ஏமாற்றமே: ஆனால், இந்த முறை இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பெருந்தொற்று காலம், ஓய்வுப் பெறும் வயது 60ஆக உயர்த்தியது, கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித புது அறிவிப்பும் வராதது என பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையே பல ஆயிரக்கணக்கான தேர்வர்கள், குறிப்பாக ஏழைகள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் பயின்ற தேர்வர்களுக்கு குரூப்-1, 2 மற்றும் 4 ஆகியவை மிகவும் நம்பிக்கைக்குரியதாக எதிர்பார்த்தனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வினை பெண்கள், கைவிடப்பட்டோர், கணவனை இழந்தோர், மாற்றுத்திறனாளிகள் எழுதினர். அவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு இதில் உண்டு. வழக்கமாக 10 ஆயிரம், 15 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு அதுவும் குறைந்து 5 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது. ஆகையால், வருமாண்டு இதனை சரிசெய்து அதிக எண்ணிக்கையிலான காலிப்பணியிடங்களுக்கு குரூப் தேர்வுகள் நடைபெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
நிலுவையிலுள்ள பணிகளின் நிலை என்ன?: அந்தந்த துறை மற்றும் வாரியங்கள் பணி நியமனம் செய்வதைத் தடை செய்து, அவை அனைத்தையும் போட்டித் தேர்வுகளின் மூலமே நியமனம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு எடுத்த முடிவு அனைத்துத் தரப்பிலும் வரவேற்பைப் பெற்றது. இதன் காரணமாக, இதுபோன்ற நியமனங்கள் வாயிலாக லஞ்சம் கரைபுரண்டோடியது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை செயல்படுத்தியிருந்தால் பணியிடங்களின் எண்ணிக்கை வெகுவாகக் கூடியிருக்கும். டிஎன்இபி-யில் (TNEB) அறிவிக்கை வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அப்பணியிடங்கள் நிரப்பப்படவே இல்லை. இதேபோன்ற நிலைதான் ஆவின்(Avin), போக்குவரத்து போன்ற துறைகளிலும் நிலவுகிறது.
கனவுகளை தமிழ்நாடு அரசு கானல்நீராக்குமா?: இந்த நிலையில், வெளியான 2023ஆம் ஆண்டிக்கான தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கால அட்டவணை மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும், அந்த அட்டவணையில் வருகின்ற 2023ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கை இடம் பெற்றுள்ளது. ஆனால், அந்த தேர்வும்கூட 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே என்ற அறிவிப்பு வேதனை தருகிறது. ஆக, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எதுவும் வருமாண்டு நடைபெறவில்லை என்பதுதான் இதில் முக்கியமானது.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் 3.5 லட்சம் பேருக்கு அரசுப்பணிகள் வழங்கப்படும் எனக் கூறியுள்ளனர். ஆனால், தற்போது இது கானல்நீராகிவிட்டது. இந்த அறிவிப்பின் வாயிலாக தமிழ்நாட்டு போட்டித் தேர்வர்கள் அனைவரும் பெரும் மனஉளைச்சலில் உள்ளனர். தமிழ்நாட்டில் வேலையின்மை பிரச்சனை மிகப்பெரிதாக உள்ளது.
தனியார்மயமாக்கலில் அவுட்சோர்சிங் முறை: தமிழ்நாட்டில் பெரும்பாலான ஊர்களில் பட்டதாரி இளைஞர்கள் ஒன்றுகூடி மர நிழல்களிலோ, ரயில் நிலையங்களிலோ (அ) பள்ளிகளின் வளாகத்திலோ அமர்ந்து போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் காட்சியை இயல்பாகக் காண முடியும். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு மனிதவள சீர்திருத்தக்குழு ஒன்றை அமைக்க அரசாணை எண் 115 வாயிலாக அறிவிப்பு செய்துள்ளது. குரூப்-சி மற்றும் டி (Groub-C, Groub-D) பணியாளர்களை வெளி முகமைகள் என்ற அவுட்சோர்சிங் முறை (Outsourcing method) மூலமாக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இந்த முயற்சி தனியார் மயமாக்கத்தின் (Privatization) முதல் படியாகும். சி மற்றும் டி நிலை பணியாளர்களில் தொடங்கி படிப்படியாக அரசு துறையின் அனைத்து நிலைகளிலும் இது பரவலாக்கப்படும் என அஞ்சுகிறோம்.
போட்டித் தேர்வர்களில் வாழ்க்கை என்னவாகும்? இப்போதும் கூட முனிசிபாலிட்டி மற்றும் மாநராட்சிகளில் ஒப்பந்தப் பணியாளர்களே நியமனம் செய்யப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இந்த ஒப்பந்தப் பணிகளில் எந்தவித பொறுப்புணர்வும் இருக்காது. வேலைகள் ஏனோ தானோவென்று இருக்கும். அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களுக்கு அச்ச உணர்வு இருக்கும். பணிப் பாதுகாப்பும் உண்டு. ஒப்பந்தப்பணியாளர்களுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதியம் ஒப்பந்ததார்களால் வழங்கப்படுவதில்லை. இதுபோன்று தனியார் மயமாக்கினால், அரசு வேலையையே நம்பிக் கொண்டிருக்கின்ற தேர்வர்களின் கதி என்ன..?
அலட்சியமான அரசு பணியாளர்களா?: டிஆர்பி (Teachers Recruitment Board - TRB) என்று சொல்லக்கூடிய ஆசிரியர் தேர்வு வாரியத்தில் ஒப்பந்தப்பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளனர். குறிப்பாக, கடந்த 2012ஆம் ஆண்டு மாநில தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கெல்லாம் தற்போது நியமனத் தேர்வு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் எந்த அளவிற்கு மாணவர்களுக்கு ஈடுபாட்டோடு வகுப்பு எடுப்பார்கள் என்பது கேள்விக்குறி. மேற்கண்ட அரசாணைக்கு எதிர்ப்பு கிளம்பியவுடன் அதனை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்களே ஒழிய அந்தக் குழு இன்னும் கலைக்கப்படவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு தனியார்மயமாக்கத்தை மிக மெதுவாக செய்து கொண்டிருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
40 லட்சம் பேரின் வாழ்க்கைக் கேள்விக்குறி: போட்டித் தேர்வுகள் எழுதக்கூடிய தேர்வர்களில் பெண்கள் 30 வயதைக் கடந்தவர்கள் அதிகமாக உள்ளனர்: அதேபோன்று ஆண்கள் 35 அல்லது 40 வயதைக் கடந்தும் உள்ளனர். இதற்காக திருமணம் செய்து கொள்ள முடியாமலே அவர்களின் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், இன்னமும்கூட நம்பிக்கையோடு போட்டித் தேர்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். அரசு வேலைக்காக ஏறக்குறைய 40 லட்சம் பேர் தங்களை தயார்ப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
'தமிழ்'-ஐத் தாங்கும் அரசே கண் திறவாயோ: பிற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மத்திய அரசுப் பணிகளை வேறுவேறு மாநிலங்களில் எழுதிக்கொள்ள முடியும். காரணம் ஆங்கிலமும், இந்தியும் தேர்வுத்தாளில் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 'தமிழ்..தமிழ்' என்று அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருக்கிறார்களே ஒழிய மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழைக் கொண்டு வருவதில் பெரிதும் தீவிரம் காட்டவில்லை. ஆகையால், இங்குள்ள போட்டித் தேர்வர்களுக்கு ஒரே வாய்ப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்தான்.
தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசுப் பணிகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். காரணம், தாங்கள் அறிந்த இந்தி மொழியில் தேர்வெழுதி எளிதாக வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில், மிகவும் பின்தங்கிய பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து மத்திய அரசுப் பணியில், அந்த மாநிலத்தைச் சேர்ந்தோர் தேர்வு பெறுவதற்கு இதுதான் காரணம்.
அரசு கவனம் தேவை: போட்டித் தேர்வுகள் அவர்களுக்கான கூடுதல் வாய்ப்பு என்பதை உணர்ந்து 'இந்தி மொழி'யில் தேர்வெழுதி வெற்றி பெறுகிறார்கள். பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மத்திய அரசுப் பணிகளுக்கு, பீகார் மாநில மாணவர்கள் வருவதைப் போன்றே, தமிழகத்தின் மிகப் பின்தங்கிய மாவட்டமான தருமபுரியிலிருந்து தமிழ்நாடு அரசு பணிக்கு நிறைய பேர் தேர்வாகிறார்கள் என்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
எனவே, இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு தமிழ்நாடு அரசு, காலிப்பணியிடங்களை தாமதமின்றி நிரப்புவதோடு, வருமாண்டு தேர்வு அட்டவணையில் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளில் நிறைய காலிப்பணியிடங்களை அறிவிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு போட்டித் தேர்வர்களின் கோரிக்கையும் வேண்டுகோளும்' என்கிறார்.
இதையும் படிங்க: அதிருப்தி அளிக்கும் டிஎன்பிஎஸ்சி ஆண்டு திட்டம்.. அவுட்சோர்சிங் முறையை கொண்டுவர அரசு திட்டமா?