கரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக வர்த்தக சங்கங்களுடனான நேற்று (ஜுலை 3) ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்களில் நடைபெற்றது.
இதில் பங்கேற்றுப் பேசிய வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார், 'கரோனா அறிகுறி ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். இதற்காக டெலிமெடிசன் வசதியை மதுரை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.
தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதியற்றவர்களுக்கு மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றில் கோவிட் நல வாழ்வு முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது' என்றார்.
மேலும், “தீவிர பாதிப்பு இருப்பின் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மூன்று வேளையும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மாவட்டத்தில்தான் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் பேசுகையில், “மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்பதில்லை. போதுமான வசதிகள் இருப்பவர்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளலாம்.
அவர்களுக்கு டெலிமெடிசன் மருத்துவக் குழுவின் ஆலோசனையோடு, அவர்கள் வழங்கும் மருந்துப் பெட்டகத்தின் மூலமாக 14 நாள்களில் குணமடைந்துவிடலாம். தொழில் நிறுவனம், கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். பணியாளர்கள் பணிக்கு வருவதற்கு முன்பாக வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் இருப்பின் அவர்களை பணியில் அமர்த்துதல் கூடாது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க... சிகிச்சைக்கு ஒத்துழைக்காத குரங்கு குட்டியின் தேவையறிந்த வனத்துறையினர்!