மதுரை மாவட்டம் பாலமேடு அருகேயுள்ள ராமகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவருடைய சகோதரர்களான முருகன், சின்னத்துரை ஆகியோர் அடிக்கடி குடித்துவிட்டு செல்வராணியுடன் தகராறில் ஈடுபடுவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்றிரவு மது போதையில் வந்த அவர்கள் இருவரும், செல்வராணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சின்னத்துரை தன் வீட்டில் தயாரித்து வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை செல்வராணி வீட்டுப் பகுதியில் வீசிவிட்டு தப்பியோடினர்.
இதில், மூன்று நாட்டு வெடிகுண்டுகளை செல்வராணி வளர்த்து வந்த நாய்க்குட்டி தூக்கிச் சென்று வேறு பகுதியில் தூக்கி எறிந்தது. ஒரு வெடிகுண்டை வாயில் கவ்விச் செல்லும்போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் நாய் தலை சிதறிய நிலையில் உயிரிழந்தது.
நாட்டு வெடிகுண்டு வீசிச் சென்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்துள்ள பாலமேடு காவல் துறையினர், தப்பியோடிய சின்னத்துரையை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உள்பட 19 பேருக்கு கரோனா பாதிப்பு