மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, “தேவந்திரகுல வேளாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒரு பகுதியான பெயர் மாற்ற திருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்துள்ளது.
ஆறு உள்பிரிவுகளைச் சேர்ந்த வகுப்பினரை தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரில் அழைப்பதோடு, பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.
பட்டியல் பிரிவில் இடம்பெற்றதால் சமூக ஒடுக்கல்களுக்கு ஆளாகினர். புதிய தமிழகம் கோரிக்கை என்பது பெயர் மாற்றம் மட்டுமல்ல, பட்டியல் பிரிவில் வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.
ஆனால், மத்திய அரசு பெயர் மாற்றத்தை மட்டும் நிறைவேற்றவுள்ளது. பெயர் மாற்ற மசோதாவில் சிறு மாற்றம் கொண்டுவந்து பட்டியல் பிரிவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதே மத்திய அரசுக்கு நாங்கள் விடுக்கும் வேண்டுகோள்.
மத்திய அரசு பெயர் மாற்ற அறிவிப்பு கேலிக்கூத்தானது. பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்பது எங்களது அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினை, பட்டியல் பிரிவிலிருந்து எங்களை நீக்கவில்லை எனில் சமத்துவத்தை விரும்பாதவர்கள் என்றுதான் அர்த்தம்.
பட்டியல் பிரிவு வெளியேற்றம் அறிவிக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். பட்டியல் பிரிவில் இருப்பதால் அரசுப்பணி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டிற்காக வெளியேறவில்லை. சுயமரியாதைக்காகதான் வெளியேறுகிறோம்.
எந்த அரசியல் கட்சி மீதும் தனிப்பட்ட அனுசரணையாக நான் இருக்க மாட்டேன். ஒத்த கருத்து இருக்கக்கூடிய கட்சிகளோடு கூட்டணியில் இருந்திருக்கிறோம்.
எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் நாங்கள் பாஜகவுடன் இணைந்தோம். பட்டியல் பிரிவு வெளியேற்றம் நிறைவேற்றவில்லை எனில் தேர்தலில் பிரதிபலிக்கும், திராவிட கட்சிகள் சமத்துவத்தை விரும்பவில்லை என்பதால்தான் எங்களின் கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது.
சமுதாய, சமூக உயர்வு குறித்து கண்டுகொள்ளவில்லை. எல்லாம் வாக்குகளாகத்தான் திராவிட கட்சிகள் பார்க்கின்றன. வரும் பிப்ரவரி 25ஆம் தேதி கோயம்புத்தூர் வரும் பிரதமரைச் சந்தித்து எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றம் குறித்து கோரிக்கைவிடுப்பேன்.
பட்டியல் பிரிவு வெளியேற்றம் என்ற பிரதான கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் பாஜக கூட்டணிக்கு தேவேந்திர குல வேளாளர்களின் வாக்குகள் கிடைக்காது.
மத்திய அரசின் பெயர் மாற்றம் அறிவிப்பு என்பதே தினசரிகளில் பாராட்டு விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எளிதாக நிறைவேற்றிய மத்திய அரசு, எங்களது பட்டியல் பிரிவு வெளியேற்றத்தைச் செயல்படுத்த மறுப்பது ஏன்?” என்றார்.
இதையும் படிங்க: 'அடிக்கிற அடியில் சனாதான கட்சி தமிழ்நாட்டின் பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது' - திருமாவளவன் தாக்கு!