மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கள்ளர் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி இயங்கிவருகிறது. இந்த கல்லூரியின் முதல்வராக ரவி என்பவர் பொருப்பில் உள்ளார்.
இந்நிலையில், அக்கல்லூரியின் பேராசிரியர்கள் 25க்கும் மேற்பட்டோர், கல்லூரி வளாகத்திலுள்ள மூக்கையாத் தேவர் நினைவு மண்டபத்தில் அமர்ந்து கல்லூரி முதல்வரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது, “கரோனா ஊரடங்கிற்குப் பிறகு இம்மாத ஆரம்பத்தில் கல்லூரி தொடங்கப்பட்ட நிலையில் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஒவ்வொரு துறைக்கும் பேராசிரியர்கள் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
இந்த கருத்தரங்கு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அந்தந்த பாடப்பிரிவு ஆசிரியர்கள் செய்கின்றனர். ஆனால், கருத்தரங்கு கூட்டத்திற்காக கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்களிடம் இருந்து முதல்வர் ஐந்தாயிரம் ரூபாய் பணம் வசூலிக்கின்றார்.
கல்லூரியில் பணிபுரியும் சுயநிதி பாடப்பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அரசு உதவியின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்களிடம் மாதம் 2 ஆயிரம் ரூபாய் பணம் வசூலிக்கின்றனர்.
மேலும், கல்லூரியில் புதியதாக பாடப்பிரிவுகள் தொடங்க இருப்பதாகக் கூறி 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு கல்லூரி முதல்வர் ரவி தொல்லை கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து பலமுறை கல்லூரி பேராசிரியர்கள் நிர்வாகத்திடம் முறையிட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதையும் படிங்க: கல்லூரி முதல்வர் மீது மாணவர்கள் தாக்குதல்: மருத்துவமனையில் அனுமதி!