ETV Bharat / state

பொதிகைச்சோலை: இயற்கை வேளாண்மைக்கு உயிர் கொடுக்கும் கூட்டுறவுப் பண்ணையம்

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், ஆர்வமுள்ள அனைவரையும் ஒருங்கிணைத்து கூட்டுறவுப்பண்ணை முறையை ஊக்குவிக்கிறது 'பொதிகைச் சோலை' என்ற அமைப்பு. இங்கு நடைபெறும் வேளாண் குறித்த பயிற்சிகளில் ஐடி பொறியியல் பட்டதாரிகள் மட்டுமன்றி, இளம்பெண்களும் ஆர்வமாகப் பங்கேற்று பயிற்சி மேற்கொள்கின்றனர். அதுகுறித்த ஒரு சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

பொதிகை சோலை: இயற்கை வேளாண்மைக்கு உயிர் கொடுக்கும் கூட்டுறவுப் பண்ணையம்

author img

By

Published : Jun 6, 2022, 4:03 PM IST

மதுரை: நிலையற்ற வருவாய், நம்பகத்தன்மையற்ற சூழல், பருவநிலை மாற்றம் போன்றவற்றால் இந்திய வேளாண் எதிர்காலம் கேள்விக்குறியாகிவரும் நிலையில், அதனை நம்பி வாழும் கோடிக்கணக்கான விவசாயிகள், உழவுத்தொழிலை விட்டே வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகளின் பொருளாதாரக் கொள்கைகளும் சிறு, குறு விவசாயிகளின் கழுத்தை நெரிப்பதாக உள்ளது.

இதனால், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகின்ற நிலையில், சாதாரண பொதுமக்கள் வெறும் நுகர்வோராக மட்டுமே இருக்க முடியும் என்பதால், சிறு, குறு விவசாயிகள் தொடர்ந்தும் தள்ளாட்டத்தில் இருக்க வேண்டிய யதார்த்த நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது.

பொதிகைச்சோலை: ஆனால், இதற்கு நேர்மாறாக இயற்கை வேளாண்மையின் மீது அக்கறை கொண்ட எவரும் விவசாயத்தில் இறங்கி சாதிக்க முடியும் என்பதை 'பொதிகைச் சோலை (Promoting Organization for Tamil Heritage Inhabitant and Green Advancement Initiatives - POTHIGAI) ' என்ற அமைப்பு நிரூபித்துக் காட்டி வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், கூட்டுறவுப் பண்ணைய முறையை ஊக்குவித்து வரும் பொதிகைச்சோலை, ஆர்வம் காட்டி வரும் இளைய தலைமுறையினருக்கும் பயிற்சி அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சற்றேறக்குறைய 103 ஏக்கர் நிலத்தில் ’பொதிகைச்சோலை’ உருவாக்கப்பட்டுள்ளது. அப்பகுதியின் சந்தை விலைக்கேற்ப நிறைவான விலையில் ஒருவருக்கு ஒரு ஏக்கர் என்ற அளவில் நிலங்களை வாங்கி, அவரவர் பெயரில் கூட்டுப்பட்டா தயாரிக்கப்பட்டு,

பொதிகை சோலை
பொதிகைச்சோலை

அதில் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு அவர்களே நுகர்வோராகவும், எஞ்சியுள்ளவற்றை வெளிச்சந்தையில் விற்று அதன் வருமானமும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில், தலைவர், பொருளாளர், செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள், உறுப்பினர்கள் என இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பொதிகைச்சோலை கூட்டுறவு சங்கத்தின் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த அமைப்பின் மூலமாக இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சிகள் மட்டுமன்றி, சூழல் சுற்றுலாக்களும் நடத்தப்படுகின்றன.

அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து: தற்போது 60 நாள் 'திணையியல்' பயிற்சியில் ஈடுபட்டுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.டெக். பட்டதாரியான முரளி கிருஷ்ணன் கூறுகையில்,

'வாழ்வின் நிரந்தரம் எது என்ற தேடலில் நான் ஈடுபட்டபோது, விவசாயம்தான் நமக்கான வாழ்வியல் மற்றும் எதிர்காலம் என்பதை முடிவு செய்து, வேளாண் அறிஞர் பாமயனின் பேச்சுகளால் கவரப்பட்டு, இங்கு பயிற்சிக்கு வந்தேன். இங்கு வந்த பிறகுதான் வேளாண்மை குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

வேளாண்மையை ஒரு வாழ்வியலாக உணர்ந்து கொள்வதற்கு இந்தப் பயிற்சி ஒரு வாய்ப்பாக அமைந்ததை என்னால் உணர முடிந்தது. உணவுமுறை மட்டுமன்றி பழக்கவழக்கத்திலும் எங்களுக்குள் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது' என்கிறார்.

சங்கத் தமிழ் இலக்கியங்கள் கூறும் வேளாண்மை குறித்த அனைத்துவிதமான கூறுகளும் இங்கே கற்றுத்தரப்படுகின்றன. எளிமையான, ஆடம்பர நுகர்வு அற்ற வாழ்க்கை முறையே இங்கு கற்றுத் தரப்படும் பயிற்சியின் மையப்பொருளாக அமைந்துள்ளது. அதிகாலை எழுவது முதல், இரவு படுக்கைக்குச்செல்வது வரை பல்வேறு வகையான செயல்பாட்டுப் பயிற்சிகளே பொதிகைச்சோலையில் அதிகம்.

பொதிகை சோலை
பொதிகைச் சோலை

சென்னையைச் சேர்ந்த மற்றொரு ஐடி ஊழியர் அமலா கூறுகையில், 'நகர வாழ்க்கையும், நாம் சேமித்து வைத்துள்ள பணமும் மட்டுமே நமக்கான நிம்மதியைத் தராது என்பதை உணர்ந்தே, இந்தப் பயிற்சிக்கு வருகை தந்தேன். நாம் உருவாக்குகின்ற எதுவும் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பதை இங்கு வந்த பின்னர்தான் என்னால் உணர முடிந்தது. இங்கு பயிலும்போதும், பயிற்றுவிக்கின்ற ஆசிரியர்களோடு உரையாடும்போதும் வேளாண்மை குறித்து எங்களுக்குள் இருந்த பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைத்தது.

இந்தப் பயிற்சிக்கு வந்த புதிதில் எங்கள் அனைவருக்கும் 25 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் நாங்கள் பல்வேறு விதமான காய்கறிகளை விதைத்தோம். திடீரென ஒரு நாள் பெய்த மழையில் அவையனைத்தும் தண்ணீரோடு அடித்துச்சென்றுவிட்டன. இது எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும் அதுவே ஒரு பாடமாகவும் அமைந்தது' என்கிறார்.

திருவாரூரைச் சேர்ந்த இயந்திரப்பொறியியல் பட்டதாரி அபர்ணா கூறுகையில், 'வேளாண் சார்ந்த வாழ்வியல் முறையில் மனிதர்கள் விழுமியங்களோடு வாழ்ந்தார்கள். தற்போதுள்ள வாழ்வியல் முறை சூழலுக்கும், உயிர்களுக்கும் உகந்ததாக இல்லை.

பொதிகை சோலை
பொதிகை சோலை

பல் துலக்குவதிலிருந்து குளிப்பது வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் வாழ்ந்த ஒரு சமூகம் இன்றைக்கு ஏதோ ஒரு வகையில் பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய நிலை ஏன் உருவானது என எண்ணிப்பார்க்கும்போதுதான் இயற்கை வேளாண் வாழ்வியலின் அவசியத்தை உணர முடிகிறது. இனி வருங்காலத்தில் இயற்கை சார்ந்த பொருளாதாரம் மட்டுமன்றி, அறம் சார்ந்த வாழ்வியலும் அவசியம்' என்கிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்: 'பொதிகை என்பது தமிழ் திணைநெறிக்கோட்பாடுகளை முன்னிறுத்தி வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு, வாழ்வியலை அமைத்துக்கொள்ளும் ஓர் இயற்கை நேய வாழ்க்கை முறை' என்பதை முழக்கமாகக் கொண்டு இயங்கி வரும் ’பொதிகைச்சோலை’ என்ற அமைப்பில் உறுப்பினராக இணைய வேண்டுமெனில், இயற்கையை நேசித்தல், உயிர்ம நேயம், வாய்மை, அன்புடைமை, ஒழுக்கம் உடைமை என்பது உள்ளிட்ட 12 கட்டளைகளை கண்டிப்பாகப் பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்பது முக்கிய விதியாகும்.

இதுகுறித்து இயற்கை வேளாண் அறிஞரும் பொதிகைச்சோலை அமைப்பின் தலைவருமான பாமயன் கூறுகையில், 'நாளுக்கு நாள் நகரங்களுக்கும், கிராமங்களுக்குமான இடைவெளி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதேபோன்று கிராமப்புறங்களில் வாழ்வதற்கான சூழல் நெருக்கடி மிகுந்ததாக மாறுகிறது. கிராமப்புறங்களில் அழிந்து கொண்டிருக்கும் வேளாண்மையை மீட்டெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்த இடைவெளியை நிரப்ப வேண்டிய அதே நேரம் நமது பண்டைய வேளாண் முறையையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டியதன் அடிப்படையில் உருவானதே இந்த கூட்டுப்பண்ணைய முறையை ஊக்குவிக்கும் பொதிகைச்சோலை. நமது முன்னோர்கள் உருவாக்கிய திணைக்கோட்பாட்டு முறையின் மூலமாக இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறைக்கு நாம் திரும்பியாக வேண்டும்.

பொதிகைச்சோலை சிறப்பு தொகுப்பு

'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்ற வள்ளுவனின் வாக்கினுக்கேற்ப நம் வாழ்வியல் முறை மாற வேண்டும் என்பதே பொதிகைச்சோலையின் நோக்கம். ஒருவருக்கு ஒரு ஏக்கர் என நிபந்தனைகளின் அடிப்படையில் இணைக்கப்படுவார். இதிலிருந்து வெளியேற நினைத்தாலும், அன்றைய சந்தை மதிப்பில் அவர்களுக்கான தொகை வழங்கப்பட்டு மற்றொருவர் உறுப்பினராக இணைக்கப்படுவார்.

ஆக, இதன் முக்கிய நோக்கம், கூட்டுறவு, பொதுவுடமை, இயற்கை வாழ்வியல் என்பதுதான்' என்கிறார். தற்போது சிவகங்கை மாவட்டம், கல்லல் பகுதியில் பொதிகைச்சோலை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்பதை பெருமையோடு பகிர்கிறார், பாமயன்.

காலத்தின் தேவையாக வளர்ந்து வரும் ’பொதிகைச்சோலை’ என்ற கூட்டுறவுப் பண்ணைய முறை பண்டைய வேளாண் வாழ்வியலை நவீன தொழில் முறை உத்திகளோடு மீட்டெடுப்பதுடன், இயற்கையோடு புரிதலுடன் கூடிய மனித வாழ்வியலுக்கும் அச்சாரமிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இதையும் படிங்க: நாட்டு மாடுகள் வளர்ப்பில் அசத்தும் நெல்லை பொறியாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.