மதுரை புது மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சொந்தமாக சில்வர் பட்டறை நடத்திவருகிறார். இந்நிலையில் இவர்களின் கம்பெனியில் வேலை பார்க்கும் முத்து என்பவர் கந்தசாமியிடம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து கடனை திருப்பி தராமல் காலம் தாழ்த்தி வந்த முத்துவிடம் கந்தசாமி கடனை திரும்ப அளிக்குமாறு கேட்டுள்ளார். அப்போது முத்துவின் மகனான சக்திவேல், எனது தந்தையிடம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கிறாயா எனக் கூறி கந்தசாமியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சக்திவேல் மற்றும் அவரது நண்பர்களான மருதுபாண்டி, மணிக்குமார் ஆகிய மூன்று பேரும் தொழிலதிபர் கந்தசாமியின் மகன் அஜித்குமாரை ஆட்டோவில் கடத்திச் சென்றனர். பின்னர் அஜித்குமாரை அவர்கள் இரவு முழுவதும் வைத்து அடித்து சித்தரவதை செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தப்பித்து வந்த தொழிலதிபர் மகன் அஜித்குமார் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் மூன்று பேரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.