கோவை: திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலணி அணியமாட்டேன் எனக்கூறி அணிந்திருந்த ஷூவையும் கழற்றினார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.
கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,"அண்ணா பல்கலையில் மாணவி கொடூரமாக சித்திரவதை செய்து இருக்கும் செயல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை இந்த சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவில் வட்ட பொறுப்பில் இருக்கும் நபர் ஆவார். அவர் அமைச்சர்கள் நிர்வாகிகளுடன் நின்று படம் எடுத்து (புகைபடங்களை காட்டினார்)இருக்கின்றார். இவர் கட்சி பொறுப்பாளர் இல்லை என்கின்றனர், ஆனால் பொறுப்பில் இருந்திருக்கின்றார். இது முரசொலியில் வந்து இருக்கின்றது.
நானும் காவல் துறையில் 9 ஆண்டு குப்பை கொட்டி இருக்கின்றேன் எனக்கும் எல்லாமும் தெரியும். அந்த நபர் திமுகவை சேர்ந்தவர் என்பது கோபமில்லை, திமுக என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்கு தேவைபடுகின்றது. அதை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் தொடர்ந்து செய்திருப்பதுதான் எனக்கு கோபத்தை வரவழைக்கிறது. இந்த வழக்கின் FIR எப்படி வெளியானது? பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், மொபைல் எண், அப்பா பெயர் இவற்றுடன் எப்படி வந்தது? இவ்வாறு வெளியிட்ட போலீஸ் அதிகாரி யார்?
இனி ஆர்ப்பாட்டம் செய்யும் வேலை எல்லாம் கிடையாது, நாளை எனக்கு நானே சாட்டையில் அடித்து கொள்ளும் போராட்டம் நடத்த போகின்றேன், என் இல்லத்திற்கு வெளியில் நின்று 6 முறை சாட்டையில் அடித்து கொள்ள போகின்றேன் திமுக ஆட்சியில் இருந்து அகற்றும் வரை இனி காலணி அணியமாட்டேன்,செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன் காலணியை கழற்றி விடுவேன்.
இதையும் படிங்க:'எனக்கும் நடந்துச்சு'.. மாணவியிடம் குமுறிய தோழி.. அண்ணா பல்கலை. வழக்கில் புதிய தகவல்..!
நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருந்து, ஆறுபடை முருகனிடம் முறையிட போகின்றேன். மக்கள் கவனத்தை ஈர்க்க இதை தவிர வேறு வழியில்லை. அண்ணா பல்கலை சம்பவத்திற்கு பொறுப்பேற்று சென்னை கமிஷ்னர் பதவி விலக வேண்டும், குறைந்தது டெபுடி கமிஷ்னராவது பதவி விலக வேண்டும். உண்மையான அரசாக இருந்தால் 10 நாளில் குற்றபத்திரிகை தாக்கல் செய்து சம்பந்தபட்டவருக்கு தண்டணை கொடுக்க வேண்டும்.
அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டும் வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கின்றார்.தப்பு பண்ணினால் சொல்வது எங்க வேலை, பதில் சொல்வது உங்க வேலை. எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட இருக்கின்றோம். மத்திய அரசு நிர்பயா நிதி கொடுத்து இருக்கிறது. அது எங்கே போனது? சமூக நீதியை பற்றி பேச திமுக வெட்கப்பட வேண்டும். சமூக நீதிக்கு பா.ஜ.க என்ன செய்து இருக்கு, திமுக என்ன செய்து இருக்கு என பேசலாம், விவாதிக்கலாம்,"என்றார். செய்தியாளர் சந்திப்பு முடிந்ததும் காலில் அணிந்திருந்த ஷூவையும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கழற்றி விட்டு ஷூவை கையில் எடுத்துக்கொண்டு வெறும் காலில் நடந்து சென்றார்.