மதுரை இஸ்மாயில்புரம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் தமிழரசன் (17). பெற்றோர் இல்லாத நிலையில் அந்தப் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று (ஏப்ரல் 24) காலை தமிழரசன் தனது நண்பர்களோடு அருகில் உள்ள மாரியம்மன் தெப்பக் குளத்திற்கு நீர் நிரப்பக்கூடிய இணைப்பு தெப்பத் தொட்டியில் வீட்டிற்கு பயன்படுத்துவதற்கு தண்ணீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தமிழரசனுக்கு வலிப்பு ஏற்பட்டு தொட்டியில் விழுந்துள்ளார்.
உடனிருந்த நண்பர்கள் விளையாடி கொண்டிருந்ததால் தமிழரசன் விழுந்ததை கவனிக்கவில்லை. நீண்ட நேர தேடுதலுக்கு பின் தமிழரசனை உயிரிழந்த நிலையில் அருகில் உள்ளவர்கள் மீட்டெடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர், தமிழரசனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.