மதுரை உத்தங்குடி அருகேயுள்ள மங்கலகுடி பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி பஞ்சவர்ணம். மூதாட்டிக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் மதுரை மாநகராட்சி ஆம்புலன்ஸ் மூலமாக கடந்த 27ஆம் தேதி மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகக் கூறி அழைத்து சென்றுள்ளனர்,
சிறிது நேரத்திற்குப் பிறகு மூதாட்டியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து கேட்டபோது, அவர்கள் குறிப்பிட்ட மூதாட்டி மருத்துவமனையில் இல்லை எனக் கூறியுள்ளனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஊழியரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறக்கிவிட்டதாக குறிப்பேட்டை காண்பித்துள்ளார்.
இதனையடுத்து, மருத்துவமனை அலுவலர்களிடம் கேட்டபோது மூதாட்டி இங்கு அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி உறவினர்களை அலைக்கழித்துள்ளனர். பின்னர், அவர்கள் புதூர் காவல்நிலையத்தில் மூதாட்டியை காணவில்லை என புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் பல்வேறு பகுதிகளிலும் மூதாட்டியை தேடி வந்தனர்.
கரோனா மருத்துவமனைக்குள் தேட வேண்டும் என அனுமதி கேட்ட பின் உள்ளே சென்று ஒவ்வொரு நோயாளிகளின் விவரங்களை கேட்டறிந்து தேடிப் பார்த்தபோது, மூதாட்டி மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மூதாட்டி கரோனா சிகிச்சையில் இருப்பது குறித்து உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர்.
உரிய ஆவணங்களை ஆய்வு செய்யாத நிலையில் இது போன்ற குளறுபடிகள் ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள குளறுபடி காரணமாக சிகிச்சையில் உள்ள மூதாட்டியைக் காணவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியதோடு உறவினர்களை ஐந்து நாள்கள் அலைக்கழித்து, காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.