மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இயந்திர பழுது காரணமாக ஆலை இயங்கவில்லை. இதையடுத்து, மதுரை கே.கே.நகர்ப் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி பகுதியில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த சர்க்கரை ஆலையை நம்பி மதுரை, திண்டுக்கல், விருதுநகர் பகுதிகளில் கரும்பு விவசாயம் செய்கின்றனர்.
இந்தநிலையில், இயந்திரம் பழுது காரணமாக ஆலையில் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இயந்திர பழுதை நீக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்த இயந்திரத்தை சரி செய்ய உரிய நிதி ஒதுக்கவும், ஆலையை மீண்டும் தொடங்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு சர்க்கரை ஆலை ஆணையர், அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்குத் தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க:சேவல் சண்டை தொடர்பான வழக்குகள் - நீதிமன்றம் உத்தரவு