தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெயபாரதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள் விரைவில் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், வழிபாட்டுத் தலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டால், பூஜைகள், அன்னதானம், குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகள் வழக்கம்போல் நடைபெறும். இத்தகைய சூழலில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்படவில்லை எனில் கரோனா தொற்று அதிகம் பரவும் நிலை உருவாகும்.
ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்களைத் திறக்கையில், உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ”வழிபாட்டுத் தலங்கள் திறப்பது தொடர்பான நெறிமுறைகளை அரசு வகுத்து வெளியிடும். அதன் பின்னர் அதில் ஏதாவது குறைகள் இருந்தால், நீதிமன்றத்தை நாடலாம். அதற்கு முன்னதாக நீதிமன்றத்தை அணுக வேண்டியதில்லை” எனக் கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : காணொலி வாயிலாகத் திறந்துவைக்கப்பட்ட காளவாசல் உயர்மட்ட பாலம்