மதுரை: நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கண்மணி மாவீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல்செய்தார். அதில், "நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரியவகை கனிமங்கள், மணல் ஆகியவை வேறு மாநிலங்களுக்குச் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன.
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுமார் 50 குவாரிகள் அரசு அனுமதி பெற்று நடைபெற்றுவருகின்றன. இந்தக் குவாரிகளிலிருந்து எடுக்கப்படும் மண், கற்களுக்கு எவ்வித பதிவேடும் இன்றி வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இதனால் நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டு, அதிக விலைக்கு கற்கள், மணலை வாங்கும் நிலை உள்ளது.
இது போன்ற அரிய வகை கனிமங்கள், மணலை வேறு மாநிலங்களுக்குக் கடத்தப்படுவதைத் தடுக்க, தமிழ்நாடு எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்க வேண்டுமென உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படும் அரியவகை கனிமங்கள், மணலைத் தடுப்பதற்கு நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் சிறப்புச் சோதனைச் சாவடி அமைக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு குறித்து நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை அக்டோபர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்