மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள 'மாமன்னன்' (Maamannan) திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமன்னன் திரைப்படம் வெளிவந்தால் குறிப்பிட்ட இரண்டு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டம் 173 (A)-யை மீறும் வண்ணம் செயல்படுகிறார் எனவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை திருநெல்வேலி, பாளையங்கோட்டையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில், "இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் தற்போது மாமன்னன் போன்ற குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த படங்களை எடுத்து வருகிறார். கடைசியாக இவர் எடுத்த கர்ணன் படம், கொடிக்குளம் கிராமத்தில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. தற்போது குறிப்பிட்ட இரண்டு சமூகத்தினருக்கும் கர்ணன் படத்தில் வந்த சம்பவங்களை மறந்து அமைதியான சூழலில் உள்ளனர்.
இதையும் படிங்க: சிதம்பரம் நடராஜர் கோயில் விரைவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வரும்: அமைச்சர் சேகர்பாபு உறுதி!
தற்போது உள்ள சமூகத்திற்கு இது போன்ற சம்பவங்கள் நினைவில் இல்லை. ஆனால் அதனை நினைவுக்கூறும் விதமாக கர்ணன் படம் இருந்தது. இந்நிலையில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வெளியாக உள்ள படம் ‘மாமன்னன்’ வரும் ஜூலை 29ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. மாமன்னன் பட பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை இரு சமூகத்திற்கும் இடையே பிரச்சனையை காட்டும் விதமாகவே அமைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட 'காத்தப்ப பூலிதேவன்' என்பவரை 'மாமன்னன்' என அழைப்பார்கள். அவரை தவறாக சித்தரிக்கும் வண்ணம் இப்படம் அமைந்துள்ளது போல் தெரிகிறது. மேலும், இப்படத்தில் நடித்துள்ள கதாநாயகர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் இப்படத்தில் நடித்துள்ளது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 173 (A) எதிராக உள்ளது. இப்படம் வெளிவந்தால் இரு சமூகத்திற்கு இடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படத்தை தடை விதிக்கக் கோரி பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே, 29.06.2023 அன்று மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், இப்படத்தை திரையிலோ, OTT போன்ற வேறு ஏதேனும் தளத்திலோ ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு எப்போது?... தேதியை அறிவித்த படக்குழு..!