மதுரை: பெரியார் பேருந்து நிலையம் ரூ.167 கோடி ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அதனை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது குறித்து மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளரைச் சந்தித்த சு. வெங்கடேசன் கூறியதாவது, “பெரியார் பேருந்து நிலைய மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டதைவிட அதிகமான காலம் எடுத்துள்ளது.
கால தாமதம் காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். எனவே, பணிகள் ஒரு மாத காலத்திற்குள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
மதுரை ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்திற்குப் பயணிகள் நேரடியாக வந்துசெல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. அதற்கான திட்ட அறிக்கையை ரயில்வே தயாரித்துவருகிறது.
ஆலோசனை
எல்லீஸ் நகர் பாலத்தில் ஒரு இணைப்பு ஏற்படுத்தி, பேருந்து நிலையம் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும். அதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும். பேருந்து நிலைய கட்டமைப்பு மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என விமர்சனங்கள் உள்ளன.
மொத்தமாக 57 பேருந்துகள் மட்டுமே நிறுத்தும் வசதிகள் உள்ள நிலையில், வணிக பயன்பாட்டிற்கான இடம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குளறுபடி தொடர்பாக செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் சீர்மிகு நகரம் திட்ட ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளாமல், இப்படி ஒரு திட்டத்தை வகுத்த முந்தைய ஆட்சியாளர்கள் செய்த தவறு தொடர்பாக விசாரிப்பது குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி - முதலமைச்சர் ரங்கசாமி