உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக 31ஆம் தேதிவரை தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள திருப்பரங்குன்றம் தொகுதி சம்பக்குளம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா அரிசி, காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கரோனா காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கி அதிமுக அரசு நிர்வாகத் திறமையை பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசு ஏறக்குறைய 2 கோடியே பத்து லட்சம் குடும்பங்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கி வருகிறது.
அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு விலையில்லா உணவு வழங்கப்படுகிறது. திமுகவைப் பொறுத்தவரை ஒன்றிணைவோம் என்று கூறினாலும் பல முயற்சி எடுத்தாலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருள்களை கொண்டு சேர்க்க முடியவில்லை.
கரோனா நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய அனைத்து கட்சிகளையும் அழைப்பதற்கு தேவையில்லை. ஏனென்றால் அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது" என்றார்.
இதையும் படிங்க: ஒரு கை தட்டினால் ஓசை வராது - ஸ்டாலின்